தேசிய விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் பங்கேற்காததன் காரணம் சென்னை: தமிழ்நாட்டில் படிப்பிற்கு அழிக்கப்படும் முக்கியத்துவம் மாணவர்களின் விளையாட்டு திறமைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பல முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்துக் கொண்டு பதக்கங்கள் பெறும் மாணவர்களுக்கு உயர்கல்வியில் சேருவதற்கான வழிமுறையாக பெற்ற பதக்கங்களின் அடிப்படையில் அதிகப்பட்சமாக 505 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் இருந்து தற்பொழுது நடைபெற்று வரும் தேசிய அளிவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் யாரும் கலந்துக் கொள்ளவில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.
இதனால் மாநில அளவிலான போட்டிகளில் தகுதிப்பெற்ற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி மாணவர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்காததற்கு யார் காரணம் என்பதை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.
இது குறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ராஜ சுரேஷ் கூறும்போது, “அகில இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் ( SGFI) நடத்தும் விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் தேசிய அளவிலான 10 விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன. இந்த விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுத்தோறும் ஜனவரி மாதம் நடத்தப்படும். இந்த ஆண்டு நடைபெறும் போட்டிக்கான கடிதங்கள் மே மாதம் 11 ந் தேதி அனுப்பப்பட்டன.
தமிழ்நாட்டிற்கும் கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துக் கொள்வதற்கான தேர்ச்சிகள் அண்டை மாநிலங்களில் நடைபெறுகிறது என்பதை அறிந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தோம். ஆனால் அவர்கள் தகவல் வரவில்லை எனத் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவர் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதத்தை அனுப்பி விட்டதாகவும் தெரிவித்தார்.
இது குறித்து அவரிடம் கேட்டபோது, பள்ளி விளையாட்டு வீரர்களை தேர்வுச் செய்து பள்ளிக்கல்வித்துறைதான் அழைத்துச் செல்ல வேண்டும் என தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி தெரிவிக்கிறார். இதில் கடிதத் தொடர்பால் தான் மாணவர்கள் கலந்துக் கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட மாநில அளவிலான போட்டியில் தகுதிப்பெற்ற 2 பேரை அனுப்பி வைத்து இருக்கலாம். கூடுதலாக இந்தப் போட்டியில் கலந்துக் கொள்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் தேசியப் போட்டிகளில் மாணவர்கள் கலந்துக் கொள்வதற்கான அனுமதியை அளித்து நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர் சங்கம் சார்பிலும் தொிவித்து இருந்தோம். மாநில அளவிலான போட்டியில் கலந்துக் கொண்ட பின்னர், தேசிய அளிவிலான பள்ளி குழுமம் நடத்தும் போட்டியில் கலந்துக் கொண்டால் தான், தேசிய அளவிலான போட்டிகள், ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியும். தமிழ்நாட்டில் இருந்து செல்லும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் பதங்களை வென்றுள்ளனர். இது போன்ற போட்டியில் கலந்துக் கொள்ள முடியாத நிலைமை எப்படி ஏற்பட்டது என்பது தெரியவில்லை.
இதையும் படிங்க: தேசிய அளவிலான விளையாட்டுகளில் தமிழ் மாணவர்களின் வாய்ப்பு பறிபோகுகிறதா? அதிர்ச்சி தரும் தகவல்கள்..
உயர்கல்வி படிப்பில் விளையாட்டு வீரர்களுக்கான பிரிவுகளில் சேர்வதற்கு விளையாட்டு வீரர்கள் பெறும் பதகங்களின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்த சூழலால் தற்போது அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கரோனா தொற்றுக்கு பின்னர் 2 ஆண்டுகள் கழித்து தேசிய அளிவிலான போட்டிகள் நடைபெறுகிறது. இதில் கலந்துக் கொள்ளதாதது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் 65 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். 30 ஆயிரம் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லை. தொடக்கப்பள்ளிகளில் ஒரு உடற்கல்வி ஆசிரியர்களும் பணியில் இல்லை. 7 ஆயிரம் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். 7 ஆயிரம் பள்ளிகளில் 620 உடற்கல்வி இயக்குனர் மட்டுமே பணியாற்றி வருகிறோம். ஆசிரியர்களின் இந்த பற்றாக்குறை மேலும் பாதிப்பின் வீரியத்தை அதிகரித்துள்ளது. எனவே பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
தேசிய அளவில் நடைபெறும் யோகா போட்டியில் தமிழ்நாடு மாணவர்கள் கலந்துக் கொள்வதற்காக ஜூன் 10ஆம் தேதி மாவட்ட அளவில் யோகாசனப்போட்டி நடைபெறுகிறது. பள்ளி குழுமம் விளையாட்டு கூட்டமைப்பின் உறுப்பினராக பள்ளிக்கல்வித்துறையில் இருப்பவர் தான் இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.
இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறும்போது, தங்களுக்கு தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது குறித்து எந்தவிதமான தகவலும் வரவில்லை என்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறதா? என ஆச்சரியத்துடன் கேட்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கரோனா தொற்றால் கடந்த 2 ஆண்டுகளாக தேசிய அளிவிலான போட்டிகள் நடைபெறாத நிலையில் தற்போது தான் நடைபெற்று வருகிறது. இதிலும் தாங்கள் வாய்ப்பினை இழந்துள்ளதாகவும் வருத்தத்துடன் தெரிவித்தார்.
பெருகிவரும் கண்டனங்கள்:இந்த நிலையில் இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தன் கண்டனங்களை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “தில்லி, போபால் மற்றும் குவாலியர் நகரங்களில் கடந்த 5-ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டிலிருந்து ஒரு மாணவர் கூடக் கலந்து கொள்ளவில்லை. இதற்கு முழுக்க முழுக்க காரணம் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களின் அலட்சியம் தான்.
இதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு கலந்து கொள்ளவில்லை என்பது தமிழ்நாட்டிற்கு மரியாதைக் குறைவு ஆகும். பள்ளி மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதில் அதிகாரிகள் காட்டிய அலட்சியம் கண்டிக்கத்தக்கது ஆகும். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த 254 மாணவர்கள், 249 மாணவிகள் என 503 பேரை அனுப்பி வைக்கக் கோரும் கடிதங்கள் கடந்த மே 11ஆம் தேதி முதலே தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரி நாக ரத்தினத்திற்கு அந்தக் கடிதங்கள் சென்றதாகவும், அவற்றை அவர் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அழைப்புக் கடிததங்களைப் பார்த்து தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை மேற்கொள்ள தவறியதால்தான் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டு மாணவர்களால் பங்கேற்க முடியவில்லை.
உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பொறியியல் பிரிவில் 500 இடங்கள், மருத்துவப் படிப்பில் 7 இடங்கள், பல் மருத்துவப் படிப்பில் ஓரிடம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் மாணவர்கள் வெல்லும் பதக்கங்கங்களுக்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதனடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு கலந்து கொள்ளாதது தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
அண்மைக்காலங்களில் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு கலந்து கொள்ளாதது இதுவே முதல்முறையாகும். இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும். இந்த சிக்கலில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தமிழநாட்டு அரசை கண்டித்து பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தேசிய அளவிலான விளையாட்டுகளில் தமிழ் மாணவர்களின் வாய்ப்பு பறிபோகுகிறதா? அதிர்ச்சி தரும் தகவல்கள்..
இதனிடையே, அமமுக பொதுச் செயலாளரான டிடிவி தினகரன் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அகில இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் கடந்த 6ஆம் தேதி டெல்லியில் தொடங்கிய நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பள்ளிகள் சார்பில் ஒரு மாணவர் கூட பங்கேற்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
போட்டிகளில் பங்கேற்க 247 மாணவர்களை அனுப்புமாறு லக்னோவில் இருந்து விளையாட்டு குழுமம் சார்பில் கடந்த மே மாதம் 11ஆம் தேதி தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள உடற்கல்வி முதன்மை ஆய்வாளருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு, அதனை பள்ளிக்கல்வித்துறை கவனிக்காமல் அலட்சியப்படுத்தியதால் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க இயலவில்லை என ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறும் மாணவர்கள் உயர்கல்வியில் இடஒதுக்கீட்டிற்கு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கும் இது வழிவகுக்கும் என்று சொல்லப்படும் நிலையில், பள்ளிக்கல்வித்துறையின் இந்த அலட்சியத்தால் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போட்டிகளுக்கு மாணவர்களை அனுப்பக்கோரிய தகவலை உரிய முறையில் உயர் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்தவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதுடன், இனிவரும் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு பள்ளி மாணவர்கள் பங்கேற்பதை உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்” என தமிழ்நாடு அரசு இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க:Breaking:தேசிய விளையாட்டு போட்டி விவகாரம்: தமிழ்நாடு முதன்மை மாநில உடற்கல்வி ஆய்வாளர் சஸ்பெண்ட்!