சென்னை:காமராஜரின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது அரசியல் தலைவர்கள் பலர் அவரை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மரியாதை செலுத்திய முதலமைச்சர் ஸ்டாலின்
பெருந்தலைவர் காமராஜரின் 119ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை.15) அண்ணா சாலை, பல்லவன் இல்லம் எதிரே அமைந்துள்ள, காமராஜரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள அவரது படத்திற்கு மலர் தூவி, மரியாதை செலுத்தினார்.
எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்து
“கல்வியும், வேளாண்மையுமே நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று பெருமை அடையச் செய்யும் எனும் தனது தொலைநோக்குப் பார்வையால், எண்ணற்ற பள்ளிகளையும் அணைகளையும் தந்து தமிழ் சமுதாயத்தை தலைநிமிர செய்த பெருமைக்குரியவர், கல்வி கண் திறந்த கர்மவீரர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரைப் போற்றி வணங்குகிறேன்” என எதிர்க்கட்சித் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி நினைவுகூர்ந்துள்ளார்.
கே.எஸ்.அழகிரியின் உறுதி
119 கிலோ லட்டு விநியோகம்...
முன்னதாக காமராஜரின் பிறந்தநாளையொட்டி தியாகராய நகரில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் 119 கிலோ லட்டு விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து கே.எஸ்.அழகிரி பேசியதாவது, “மீண்டும் தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சியை ஏற்படுத்த காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட வேண்டும். நாம் கூட்டணியில் உள்ளோம் என்று நீங்கள் நினைக்கலாம்.
அவர்கள் கொள்கையை அவர்கள் செய்வார்கள், நமது கொள்கையை நாம் செய்ய வேண்டும். மீண்டும் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும்” என்று உறுதிபடக் கூறினார்.
டிடிவி தினகரன் வாழ்த்து
காமராஜரின் பிறந்தநாள் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்ததாவது, “தமிழ்நாட்டில் எத்தனையோ ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு கல்விக்கண் தந்து அவர்களது தலைமுறைகளை மாற்றிய பெருந்தலைவர் காமராஜரை அவரது பிறந்தநாளில் வணங்குகிறேன். தமிழ்நாடு தாண்டி தேசிய அரசியலிலும் முத்திரை பதித்த அன்னாரது நற்பணிகளை எந்நாளும் போற்றிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:கல்விக் கண் திறந்த காமராஜர்.. வாழ்வும்- வரலாறும்!