சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார் சத்திரத்தை அடுத்த திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (23). இவர் தன்னுடைய கூட்டாளியான மணி என்பவருடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை விடுதியில் தங்கி ஒப்பந்த பணியாளராகப் பணியாற்றி வருகிறார்.
பாலகிருஷ்ணனின் நண்பரான புரசைவாக்கத்தைச் சேர்ந்த முகமது இர்பான் என்பவர் திருவல்லிக்கேணி பகுதியில் தாஹிரா மெடிக்கல்ஸ் எனும் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்த மூன்று பேரும் வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முகமது கலில் (35), முகமது ஜாவித் மற்றும் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஆரிப் உசேன் ஆகியோருடன் சேர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ரெம்டெசிவர் மருந்தை கைப்பற்றி தாஹிரா மெடிக்கலில் வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர், மணியைத் தவிர மீதமுள்ள ஐந்து பேரையும் கைது செய்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள மணியை காவல்துறையினர் தேடி வந்தனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி, ரூ.1 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாகத் தனிப்படை உதவி ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதனடிப்படையில் உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமைக் காவலர் சரவணன் ஆகியோரிடம் துறை ரீதியான விசாரணை நடைபெற்றது. உதவி ஆய்வாளர் சுதாகர், தலைமைக் காவலர் சரவணகுமார் ஆகியோர் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட இரு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து காவல்துறை இணை ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.