சென்னை: காவலர்களுக்கான குடியிருப்பில் சொகுசாக காவல்துறையினர் வாழ்வதாக நினைக்கிறார்கள். ஆனால், குடிசையில் வாழ்வதை விட மோசமாக வாழ்ந்து வருகிறோம் என காவலரின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்து உள்ளனர். அதிகாரிகள் வருவார்கள், பார்ப்பார்கள், செல்வார்கள் ஆனால், நடவடிக்கை எதுவும் எடுத்ததில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் போக்குவரத்து பிரிவில் காவலராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். இவர் தனது தாய் சிதம்பரம்(62) மற்றும் குடும்பத்துடன் கடந்த ஏழு வருடங்களாக கீழ்பாக்கம் லூத்ரல் கார்டன் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார். இன்று காலை பேச்சிமுத்து வழக்கம் போல பணிக்கு சென்ற நிலையில் பிள்ளைகள் இருவரும் பள்ளிக்கு சென்றனர்.
இந்நிலையில் மதியம் 12மணியளவில் பேச்சிமுத்தின் மனைவி சமையல் செய்து கொண்டிருந்த போது காவலரின் தாய் சிதம்பரம் உடல் நிலை சரியில்லாமல் வீட்டின் அறையில் படுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மேற்கூரை இடிந்து காவலரின் தாய் மீது விழுந்தது. மாமியாரின் அலறல் சத்தம் கேட்டு சுப்புலட்சுமி சென்று பார்த்தார். வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து, அவர் காயம் அடைந்து இருந்தை கண்டார். உடனடியாக சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சம்பவ இடத்தை, காவல் உதவி ஆணையர் பார்வையிட்டார். இந்த விபத்து சம்பவத்தினால் காவலர் குடியிருப்பில் வசித்து வரும் பலர் பீதியில் இருந்து வருகின்றனர்.