பள்ளி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்தது, ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியது தொடர்பாக, சென்னை கே.கே. நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பாலபவன் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் கடந்த 24ஆம் தேதி கைதுசெய்யப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆசிரியர் ராஜகோபால் பிணை கோரி மனு தாக்கல்செய்துள்ளார்.
இதற்கிடையே, காவல் துறை தரப்பில், ராஜகோபாலனை ஐந்து நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மனுக்களும், நீதிபதி முகமது பாரூக் அமர்வில் ஜூன் 4ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, ஆசிரியர் ராஜகோபாலனை மூன்று நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்தார். அவரிடம் காவல் துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணையைத் தொடங்கினர்.
இந்நிலையில் நேற்று (ஜூன் 2), ராஜகோபாலிடம் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் துணை ஆணையர் ஹரிகிரண் பிரசாத் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார்.
அவரின் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த ஆசிரியர்கள் யார், பள்ளி நிர்வாகத்திற்குத் தெரிந்தே நடந்ததா என்ற அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும், ராஜகோபாலனை கைதுசெய்ய காவல் துறையினர் சென்றபோது, வாட்ஸ்அப் சாட்டுகள், மெயில் ஆதாரங்களை அழித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, சைபர் ஆய்வகம் மூலம் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்டெடுத்து அதனை ஆய்வு செய்துவருகின்றனர்.
ராஜகோபாலனிடம் நடத்தப்படும் அனைத்து விசாரணையும் காணொலியாகப் பதிவுசெய்யப்படுகிறது. விரைவில் அனைத்துவிதமான விசாரணையை முடித்துக் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யும் வகையில் காவல் துறையினர் விசாரணையை முடுக்கியுள்ளனர்.