தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நடிகர் விஜய்யின் தந்தை மீது மோசடி புகார்: மீண்டும் விசாரணை - சென்னை மாவட்ட செய்திகள்

நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான ரூ.21 லட்சம் மோசடி புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தவுள்ளதாக போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் தந்தை மீது மோசடி புகார்
நடிகர் விஜய்யின் தந்தை மீது மோசடி புகார்

By

Published : Dec 14, 2022, 6:46 AM IST

சென்னை: டிராஃபிக் ராமசாமி என்ற திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்குவதாகக் கூறி நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் வெளிநாட்டு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து 21 லட்சம் ரூபாய் பெற்றதாக தெரிகிறது. ஆனால் சொன்னபடி வெளியீட்டு உரிமையை வழங்காமல் சந்திரசேகர் தானே அத்திரைப்படத்தை வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும், எஸ்.ஏ.சந்திரசேகர் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பிரம்மானந்தம் சுப்பிரமணியம் சார்பில் அவரது நண்பரும், தயாரிப்பாளருமான மணிமாறன் என்பவர் முதலில் விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும் பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் அளித்தார்.

அதன் தொடர்ச்சியாக சிவில் நீதிமன்றத்திலும் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கிய பணத்திற்கான வட்டியுடன் சேர்த்து 27 லட்சம் ரூபாய் பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்க உத்தரவிட்டது.

ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகர் பணத்தை கொடுக்காமல் தனக்கும் தனது வெளிநாட்டு வாழ் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக, தயாரிப்பாளர் மணிமாறன் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

அவ்வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார்தாரரான மணிமாறன் மற்றும் எதிர்மனுதாரரான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்துமாறு விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் எஸ்.ஏ.சந்திரசேகர் மீதான 21 லட்சம் ரூபாய் மோசடி புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தவுள்ளதாக விருகம்பாக்கம் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திமுகவின் மூன்றாம் தலைமுறை வாரிசாகிறாரா உதயநிதி? - ஓர் அலசல்!

ABOUT THE AUTHOR

...view details