சென்னை: கோவை மாவட்டம் வால்பாறை திராவிட தோட்டத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கத்தின் தலைவர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில், கோவை மாவட்ட எஸ்பி பத்ரி நாராயணன் மற்றும் கோவை நகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
அதில் கூலி உயர்வை வலியுறுத்தி, வால்பாறையிலிருந்து கோவை வரை ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று வால்பாறை காவல்நிலையத்தில் மனு அளித்ததாகவும், ஆனால் தனது மனு நிராகரிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ஊர்வலத்தை அனுமதிப்பது தொடர்பாக காவல்துறை பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்ததாகவும், ஆனால் அந்த உத்தரவை காவல்துறை நிறைவேற்றவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சிவஞானம் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ் திலக், இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார்.