சென்னைதிருமங்கலத்தில் வி.ஆர் மாலில் சட்டவிரோதமாக நடைபெற்ற டிஜே நிகழ்ச்சியில் பங்குகொண்ட இளைஞர் பிரவீன் குமார் அதிகளவிலான போதை பொருட்களை உட்கொண்டதால் மரணம் அடைந்தார். சட்டவிரோதமாக டிஜே நிகழ்ச்சிக்கு ஆன்லைன் மூலமாக 1500 ரூபாய்க்கு டிக்கெட் விற்பனை செய்தது போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆன்லைன் மூலமாகவும், சினிமா டிக்கெட் புக் செய்யும் செயலிகள் மூலமாகவும் இது போன்ற பார்ட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை நடைபெறுவதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தனிநபர்கள் முறையான அனுமதியின்றி ஒருங்கிணைக்கும் பார்ட்டிகள், டிக்கெட் விற்பனை என சமூக வலைதளங்களை கண்காணிக்கத் தொடங்கியுள்ளது சென்னை காவல் துறை.
சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் கண்காணித்து வருகிறது. இதுபோன்று அனுமதியின்றி பார்ட்டிகள் நடைபெறுவதாக பொதுமக்களுக்குத் தெரியவந்தால் சென்னை காவல் துறையின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப்பக்கங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் இன்ஸ்டாகிராம், உள்ளிட்டவற்றை டேக் செய்து புகார் அளிக்கலாம் என சென்னை காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பீச்சு ரிசார்ட்டுகள், நட்சத்திர விடுதிகள் போன்றவற்றில் டிஜே பார்ட்டி, மது விருந்து பார்ட்டி, கேளிக்கை கலைநிகழ்ச்சி பார்ட்டி எனப் பல்வேறு பெயர்களில் தனிநபர்கள் ஒருங்கிணைக்கும் பார்டிகளில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருவதால்,அதனைத் தடுக்கும் விதமாக காவல் துறை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:சட்டவிரோத டிஜே போதை விருந்து- போலீசை வசைபாடியவர்களுக்கு வலை