சென்னை: தாம்பரம் அடுத்த முடிச்சூர் சர்வீஸ் சாலையில் காதல் ஜோடி ஒன்று சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காதல் ஜோடியிடம் சென்று நீங்கள் யார்? இங்கே ஏன் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்? என கேட்டு மிரட்டியுள்ளார்.
இதையடுத்து அந்நபர் தன்னைக்காவலர் எனக்கூறி காதல் ஜோடியிடம் இருந்து சுமார் 12 சவரன் தங்க நகைகளை வாங்கிக்கொண்டு காவல் நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ளுமாறு கூறிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார். இதனால், சந்தேகமடைந்த காதல் ஜோடி இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை, ஓட்டேரி ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், காவலர் எனக் கூறிக்கொண்டு நகைகளை பறித்துச்சென்ற ஆசாமியை தனிப்படைகள் அமைத்து தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் சர்வீஸ் சாலையில் அமைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதனடிப்படையில் கடலூர் மாவட்டம், சின்னகாப்பான்குளம் கிராமத்தைச் சேர்ந்த சிவராமன் (40) என்பவரை தனிப்படை காவல் துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.