தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அக்கா பாசத்திற்காக அடியாளாக மாறி கைதான சிலம்பாட்ட வீரர்; திகு திகு பின்னணி - அமைந்தகரை

சென்னையில் பக்கத்து வீட்டுடன் ஏற்பட்ட பிரச்னையில், புது பைக்கிற்கு தீ வைத்த அண்ணன், தம்பி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

பக்கத்து வீட்டுடன் ஏற்பட்ட பிரச்சனையில் புது பைக்கிற்கு தீ
பக்கத்து வீட்டுடன் ஏற்பட்ட பிரச்சனையில் புது பைக்கிற்கு தீ

By

Published : Dec 18, 2022, 5:42 PM IST

பக்கத்து வீட்டுடன் ஏற்பட்ட பிரச்னையில் புது பைக்கிற்கு வைக்கப்பட்ட தீ

சென்னை: அமைந்தகரை எம்.எச். காலனி பகுதியைச்சேர்ந்தவர், ஆனந்தராஜ். செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி முனியம்மாள். இத்தம்பதிகளுக்கு மகள், மகன் உள்ளனர். மகன் விஜய் ஏசி மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த டிசம்பர் 10ஆம் தேதி தனது மகனுக்காக மாத தவணையில் வாங்கி கொடுத்த இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்தி இருந்தனர்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் அந்தப் பகுதிக்கு வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், இருசக்கர வாகனத்தைப் பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தி விட்டுச்சென்றுள்ளனர். இதனையடுத்து வாகனத்தில் தீ பரவி எறியத் தொடங்கியவுடன் ஆனந்தராஜ் வளர்த்து வரும் நாய் குரைக்கவே சத்தம் கேட்டு, உடனடியாக ஆனந்தராஜின் மனைவி மற்றும் மகள் ஆகியோர் வெளியே வந்து பார்த்துள்ளனர். புதிய இருசக்கர வாகனம் எரிவதைக் கண்டு அவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர்.

இது தொடர்பாக ஆனந்த் ராஜின் மகள் கனகவல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அளித்தப் புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்டமாக சி.சி.டி.வி கேமராக்களை ஆய்வு செய்த போது அடையாளம் தெரியாத நபர்களில் ஒருவர் முதலில் வந்து இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோலை ஊற்றி விட்டுச்செல்வதும், பின்னர் மற்றொரு நபர் தீ வைத்து விட்டு அங்கிருந்து தப்பி விடுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவான நிலையில் இது தொடர்பாக அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சிசிடிவி காட்சியில் இருசக்கர வாகனத்தை எரித்தவர்கள் முகத்தை மறைத்து இருந்ததால் அவர்களை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது குற்றவாளிகள் இருசக்கர வாகனத்தை எரித்து விட்டு ஆட்டோவில் தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும் ஆட்டோவின் முன்பகுதியில் ’பிரைஸ் த லார்டு’ என்ற வாசகம் எழுதப்பட்டு இருந்துள்ளது. ஆட்டோ செல்லும் வழிகளை பின் தொடர்ந்தும், ஆட்டோ எண்ணை வைத்தும் ஜெஜெ நகர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான அலெக்ஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

பின்னணி இதுதான்: போலீசார் விசாரணையில், ஆனந்தராஜ் வீட்டின் பக்கத்து கட்டடத்தில் வாடகைக்கு ஆண்கள் விடுதி நடத்தி வருபவர் சரவணன். சரவணன் மற்றும் ஆனந்தராஜ் குடும்பத்தாரும் ஆரம்பகட்டத்தில் நன்றாகப் பேசி வந்த நிலையில், வாகனம் நிறுத்துவதில் தொடங்கி, ஆண்கள் விடுதியில் தங்கும் நபர்கள் நள்ளிரவில் கூச்சலிடுவது, புகைபிடிப்பது போன்ற செயலில் ஈடுபடுவதை ஆனந்தராஜ் தொடர்ந்து கண்டித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இதேபோல தனது மனைவி அனு மீது கல்வீசியதாக ஆனந்தராஜின் மகன் மீது சரவணன் அமைந்தகரை காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில் விஜய் அண்மையில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்துள்ளார். அப்பொழுது கடுமையாக போலீசார் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் விஜய் ஜாமீனில் வெளிவந்ததை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில், விஜய் வேலைக்குச் செல்ல வாங்கி கொடுத்த புதிய இருசக்கர வாகனம் சரவணனின் கண்களை உறுத்தியுள்ளது. ஆனந்த்ராஜ் குடும்பத்தாரை அச்சுறுத்தி, தொடர்ந்து தொல்லைகள் கொடுத்து வருபவர்களை அந்தப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும், அவர்களை பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அதனை எரிக்கத் திட்டமிட்டனர்.

ஏற்கெனவே சரவணன் மற்றும் அனு ஆகியோர் வாடகைக்கு குடியிருந்த வீட்டில் பழக்கமான ஆட்டோ ஓட்டுநரான அலெக்ஸ் மற்றும் சிலம்பாட்ட வீரரான ஸ்டீபன் ஆகியோரிடம் அக்கா - மாமாவிற்காக உதவி செய்யவேண்டும் எனக் கேட்டு, சரவணன் - அனு தம்பதியினர் அழுதுள்ளார்கள்.

அதனைக்கேட்ட சகோதரர்கள் இருவரும் ஒப்புகொண்டு திட்டமிட்டபடி நள்ளிரவில் ஆட்டோவில் வந்து இருசக்கர வாகனத்தை எரித்து விட்டுச்சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் போலீசாருக்கு சந்தேகம் வரக்கூடாது எனத் தலைமறைவாகி விடாமல் நாள்தோறும் விடுதிக்கு வந்து போலீசார் விசாரணை நடத்த சம்பவ இடத்திற்கு வருகின்றனரா எனநோட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.

இதன் அடிப்படையில் சிலம்பாட்ட வீரரும், பயிற்சியாளருமான ஸ்டீபன் அவரது சகோதரர் அலெக்ஸ் மற்றும் முக்கிய குற்றவாளிகளான சரவணன் மற்றும் அவரது மனைவி அனு ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர். அனுவிற்கு கைக்குழந்தை இருப்பதால் அவரை காவல் நிலைய ஜாமீனில் விடுவித்து மற்ற மூவரையும் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:கிருஷ்ணா ஸ்வீட்ஸ் குடோனில் தீ விபத்து!

ABOUT THE AUTHOR

...view details