சென்னை:இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" (Equal Pay for Equal Work) வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கொட்டும் மழை, கொளுத்தும் வெயில் என எதையும் பொருட்படுத்தாமல் தங்களின் உரிமைக்காக கடந்த 8வது நாளாக இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
அதேபோல், பகுதிநேர சிறப்பாசிரியர்கள் தங்களுக்கு முழு நேர பணி வழங்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி இன்று 11வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்கள், தங்களுக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க அமைக்கப்பட்ட குழுவுக்கு மேலும் மூன்று மாதம் கால அவகாசம் அளிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
எனவே, ஆசிரியர்கள் அனைவரும் எண்ணும் எழுத்தும் பயிற்சிக்குச் சென்று, அதனைத் தொடர்ந்து பள்ளிக்குச் செல்ல வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருந்தார். அதேபோல், பகுதிநேர சிறப்பாசிரியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவதை 12 ஆயிரத்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் மருத்துவக் காப்பீடு செய்யப்படும் எனவும், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்குச் சென்று பணிபுரிய வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார்.