சென்னை:2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது அங்குள்ள புன்னைவன நாதர் சன்னிதியில் இருந்த தொன்மைவாய்ந்த மயில் சிலைக்குப் பதிலாக வேறொரு மயில் சிலையை மாற்றி வைக்கப்பட்டு, உண்மையான சிலை திருடப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் 2018ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரம் தொடர்பாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சிலை மாயமான விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையினரும், உண்மை கண்டறியும் குழுவையும் இணைத்து விசாரணைக் குழு அமைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆறு வார காலத்திற்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல அறநிலையத் துறை திருடுபோன மயில் சிலையை மீட்க முடியுமா, முடியாதா? என்பதைக் குறிப்பிட்டு மீட்க முடியாதபட்சத்தில் அதே அமைப்புடன் கூடிய வேறொரு சிலையை அந்த இடத்தில் வைக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல்செய்யவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் ஆகம விதிப்படி கோயில்களில் தொன்மைவாய்ந்த சிலைகளை தெப்பக்குளத்தில் மறைத்துவைக்கும் முறை இருப்பதால், திருடுபோன தொன்மைவாய்ந்த மயில் சிலை மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் மறைத்துவைக்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு சிலை கடத்தல் தடுப்பு காவல் துறையினர், தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.
உண்மையைக் கண்டறியும் குழுவுடன் இணைந்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் இன்று (பிப்ரவரி 1) மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு விசாரணைக்காகச் சென்றனர். அதன்பிறகு தீயணைப்புத் துறையினர் உதவியுடன் தெப்பக்குளத்தில் சிலை உள்ளதா? எனத் தேடும் பணியை மேற்கொள்ளவதற்காக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தயாரானார்கள். ஆனால் திடீரென அதனைத் தள்ளிவைத்துவிட்டனர். மயிலாப்பூர் கோயிலில் தெப்பத்திருவிழா நடந்துவருவதால் தள்ளிவைக்கப்பட்டதாக கோயில் நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தெப்பக்குளத்தில் தேடுவதற்காக சில அலுவலர்கள் வராததாலும் சில காரணங்களுக்காகவும் தேடும் பணியைத் தள்ளிவைத்துவிட்டதாகச் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்புப் காவல் துறையினர், தீயணைப்புத் துறையினர் உள்ளிட்ட அலுவலர்களுடன் சேர்ந்து மயிலாப்பூர் தெப்பக்குளத்தில் தேடும் பணிகளை எவ்வாறு மேற்கொள்ளலாம்? என ஆலோசனை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:ராகு கேது சிலைகளை உடைத்த டெல்லி இளைஞர் கைது