சென்னை:கடந்த மார்ச் மாதம் அடையாறு கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 3 பேர் மீது அடையாறு அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். பின்னர், கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி ஹரிபத்மன் என்ற பேராசிரியர் கைது செய்யப்பட்டார். ஹரிபத்மன் மட்டுமல்லாது மேலும் சில ஊழியர்கள் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்பதாகவும், சாதி ரீதியாக பாகுபாடு பார்ப்பதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.
162 மாணவிகள் புகார்:இது தொடர்பாக மாநில மகளிர் ஆணையமும் தலையிட்டு விசாரணை நடத்தியது. அவ்வாறு விசாரணை நடத்தியபோது, நூற்றுக்கணக்கான மாணவிகள் புகார் அளித்தனர். புகார்கள் அளிப்பதற்காக இ-மெயில் முகவரியும் மாநில மகளிர் ஆணையம் கொடுத்திருந்தது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட மாணவிகள் 162 பேர் புகார் அளித்திருந்தனர். இந்தப் புகார்கள் தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் சென்னை காவல் துறைக்கு பரிந்துரை செய்தது.
இதையும் படிங்க: டேட்டிங் ஆப் மூலம் மோசடி: மேற்கு வங்க பெண்ணை கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார்!
ஜாமீனில் வெளிவந்த ஹரிபத்மன்: இந்த நிலையில் பாலியல் புகார் தொடர்பாக இதுவரை 50-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் நேரடியாக சென்று விசாரணை நடத்தி விவரங்களை சேகரித்துள்ளனர். இதற்கிடையே, கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹரிபத்மன் 60 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 6ஆம் தேதி அவருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த ஹரி பத்மன் தினமும் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வருவது குறிப்பிடத்தக்கது.