இந்திய பிரதமர் மோடி-சீன அதிபர் ஷி ஜின்பிங் சந்திப்பு சென்னை மாமல்லபுரத்தில் நாளை (அக். 11) நடைபெறுகிறது. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எந்தவித அசம்பாவிதமும் நிகழாமலிருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அக். 11, 12 ஆகிய இரண்டு நாட்களில் இருநாட்டுத் தலைவர்களும் முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்கவுள்ளனர்.
இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் நிலையில் இந்த இரண்டு நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடி -சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் முக்கிய பிரமுகரின் சாலைவழி பயணத்தின்போது ஜி.எஸ்.டி. சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை) சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து வாகனங்கள் தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.
எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், பொதுமக்கள் முன்னேற்பாடு செய்து தங்கள் பயணத்திட்டங்களையும் வழித்தடங்களையும் அமைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும், கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11, 12 ஆகிய தேதிகளில் காலை ஆறு மணி முதல் இரவு 11 மணிவரை மேற்படி சாலைகளில் அனுமதிக்கப்படமாட்டாது. மேலும், மேற்படி மிக முக்கிய பிரமுகரின் சாலைவழி பயணத்தின்போது கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
- அக். 11, 12 ஆகிய தேதிகளில் பெருங்களத்தூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி.எஸ்.டி. சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் 'O' பாயிண்ட் சந்திப்பிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும். வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலை வழியாக, குரோம்பேட்டை-தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்திச் செல்லலாம்.மேலும், தாம்பரம், குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
- பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணிவரை ஜி.எஸ்.டி. சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாகச் செல்ல திருப்பிவிடப்படும்.
- ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும், கிழக்கு கடற்கரைச் சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.