சென்னை:வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில் சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவியும் வசித்து வருகின்றனர். அதேநேரம், மேல் தளத்தில் சில இளைஞர்கள் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் (டிச.20) இரவு பயங்கர சத்தத்துடன் ஆட்டம் பாட்டம் நடைபெற்றுள்ளது. அதனால் அக்கம் பக்கத்தில் வசித்து வருபவர்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.
அதிலும், சத்தம் அதிகாமனதால் மகாலெட்சுமி ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சத்தம் போட வேண்டாம் என கேட்டுள்ளார். இதனையடுத்து, போதையில் இருந்த 10க்கும் மேற்பட்டோர் மகாலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் சத்தம் கேட்டு வந்த சுரேஷ்குமார், அவர்களை தட்டிக் கேட்கச் சென்றபோது, பத்து பேரும் சேர்ந்து சுரேஷ்குமாரைத் தாக்கியுள்ளனர். அந்த கும்பலில் காவல் உதவி ஆய்வாளரான குமரேசன் என்பவரும் சேர்ந்து சுரேஷ்குமார் மீது தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதில் காயமடைந்த சுரேஷ்குமார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் இது குறித்து சுரேஷ்குமாரின் தாயார் அன்னக்கிளி, சென்னை புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேலுக்கு, காவல் கூடுதல் ஆணையர் அஸ்ரா கார்க் உத்தரவிட்டு உள்ளார்.
குண்டர் சட்டத்தின் கீழ் ஒரே வாரத்தில் 20 பேருக்கு கைது: கடந்த ஜனவரி முதல் தற்போது வரை சென்னையில் கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட சுமார் 459 பேர் திருட்டு, நகை பறிப்பு, வழிப்பறி மற்றும் பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 116 பேர், கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் விற்பனை செய்ததாக 84 பேர், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட நான்கு பேர் உள்பட மொத்தம் 687 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.