தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாமக ஆதரவால் தான் திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்தது - வழக்கறிஞர் பாலுவின் பேச்சும் முழுப்பின்னணியும் - சென்னை

அதிமுகவின் ஆதரவால் தான் அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்திற்கு சென்றார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருந்தார். இதற்கு பாமக செய்தி தொடர்பாளர் பாலு, அதிமுகவும், திமுகவும், பெரும்பான்மை இல்லாத நிலையில் பாமகவின் ஆதரவால் தான் பெரும்பான்மையைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது என பதில் கருத்து தெரிவித்துள்ளார்.

பாமக ஆதரவால் தான் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் திமுக, அதிமுக ஆட்சியை பிடித்தது - பாமக செய்தி தொடர்பாளர்
பாமக ஆதரவால் தான் பெரும்பான்மை இல்லாத நேரத்தில் திமுக, அதிமுக ஆட்சியை பிடித்தது - பாமக செய்தி தொடர்பாளர்

By

Published : Jan 3, 2023, 4:25 PM IST

Updated : Jan 3, 2023, 9:04 PM IST

பாமக ஆதரவால் தான் திமுக, அதிமுக ஆட்சியைப் பிடித்தது - வழக்கறிஞர் பாலுவின் பேச்சும் முழுப்பின்னணியும்

சென்னை:அதிமுகவிற்கு தலைமை தான் பிரச்னை என்றால், தற்போது கூட்டணியிலும் பிரச்னை தலைதூக்கியுள்ளது. அதிமுகவில் பாஜக, பாமக தவிர, பெரிய பிரபலமான கூட்டணிக் கட்சிகள் இல்லை. பல பிரச்னைகள் இருந்தாலும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து எடப்பாடி பழனிசாமி பணியாற்றி வருகிறார். ஆனால், பாஜகவால் தான் தமிழகத்தில் அதிமுக தோல்வியை சந்தித்தோம் என்று முன்னாள் அமைச்சர்கள் பேசியது, பாஜக - அதிமுக கூட்டணி முறியுமோ என்ற நிலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் தற்போது பாமக உடனான கூட்டணி முறியும் காட்சிகள் மேடையேறி வருகின்றன.

விழுப்புரம், வானூர் அருகே டிச.31ல், "2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், "ஒரு கட்சி என்பது நாடாளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ-க்களை கொண்டது அல்ல, மக்களுக்கு அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பது தான் முக்கியம். பாமக மட்டும் இல்லை என்றால் தமிழகத்திற்குச் சமச்சீர்க் கல்வி வந்து இருக்காது. லாட்டரி ஒழிந்து இருக்காது. இந்தியாவிற்கே நாம் வழிகாட்டியாக 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைக்கொண்டு வந்தோம். ஆட்சி அதிகாரத்தில் இல்லை என்றாலும் மக்களுக்காக உழைக்கிறோம்.

அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தமிழக கட்சிகளில் எந்த கட்சிகளில் அதிகளவில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என ஆய்வு நடத்தியதாகவும், அதில் பா.ம.க.வில் தான் அதிகளவில் இளைஞர்கள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. காலையில் நிறுவனர் அறிக்கை விட்டால் மாலையில் தீர்வு காணப்படுகிறது. அய்யா கோரிக்கைகளை ஸ்டாலின் நிறைவேற்றுகிறார். திமுக கூட்டணியில் பாமக சேர்ந்துவிடுமோ என கேட்கிறார்கள், நமது இலக்கு தமிழக வளர்ச்சி தான்' என்று அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டார்.

மேலும், 'அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் வேளாண் மண்டலம் அமைக்கக் கோரினோம். ஆனால் அங்கீகாரம் கிடைக்கவில்லை. டெல்டா மக்களே நமது கூட்டணிக்கு ஓட்டுப் போடவில்லை. இப்போது புரிந்து வருகிறார்கள். தற்போது நமக்கு ஏற்ற அரசியல் சூழல் இருக்கிறது. தமிழகத்தில் கட்சிகள் உடைந்து கிடக்கின்றன. சில கட்சிகள் விளம்பரம் செய்கிறார்கள். ஒரு தலைவர் தினமும் மீடியா பார்க்கிறார். வாட்ச் காட்டுகிறார். நமக்கு அது வேண்டாம். வளர்ச்சியை நோக்கி செல்வோம். அங்கீகாரம் வருகிறது. நம்மை விட்டால் தமிழக மக்களுக்கு வழியில்லை. இரு கட்சிகளையும் 50 ஆண்டு காலம் மக்கள் பார்த்து வெறுத்துவிட்டனர்.

அதிமுக 5 துண்டுகள் ஆகி விட்டது. திமுக விளம்பரம் தான். அடுத்து நாம் தான் மக்களுக்கான கட்சி. 35 ஆண்டுகளாகக் கட்சியை அய்யா வெற்றிகரமாக நடத்தி வருகிறார்' என்று அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார்.

இந்த நிலையில் ஜன.2 சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,"பாமக ஏறி வந்த ஏணி, அதிமுக. பாமகவை ஏற்றி விட்டது ஜெயலலிதா தான். அதிமுக இல்லை என்றால் பாமக என்ற கட்சியே வெளியே தெரிந்திருக்காது. ஜெயலலிதாவுடன் கூட்டணி வைத்த உடன்தான் பாமகவிற்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அதற்கு முன்பு பாமகவிற்கு அங்கீகாரமே கிடையாது.

1991ஆம் ஆண்டு பாமக சட்டமன்றத்தில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அதற்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்கள். ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை என்பதை அன்புமணி ராமதாஸ் நினைத்துப் பார்க்க வேண்டும்.

1998ஆம் ஆண்டு அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 சீட்டு கொடுத்த பிறகுதான் நான்கு இடத்தில் வெற்றி பெற்றார்கள். நான்கு இடத்தில் ஜெயித்ததால் மட்டுமே இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. நன்றி மறந்து அன்புமணி ராமதாஸ் இப்படி பேசினால் தமிழ்நாட்டு மக்கள் மட்டுமல்ல, உங்கள் பக்கம் உள்ள தொண்டர்கள் கூட உங்களை மதிக்க மாட்டார்கள்.

2001ஆம் ஆண்டு 27 இடங்களில் அதிமுக சார்பில் பாமகவிற்கு சீட்டு கொடுக்கப்பட்டது. அதில் 20 இடங்களில் பாமக வெற்றி பெற்றது. அதிமுக தயவால் மட்டுமே நீங்கள் வெற்றி பெற்றீர்கள். அதிமுகவால் மட்டுமே சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் உள்ளே சென்றீர்கள். எம்.பி. ஆனீர்கள். பலம் வாய்ந்த அதிமுகவை சிறுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்துப்பேசினால் அதிமுக சிறுமை ஆகி விடுமா? அதிமுக தான் அன்புமணி ராமதாஸுக்கு எம்.பி. என்ற பதவியை அடையாளம் காட்டியது.

அன்புமணி ராமதாஸின் கருத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அன்புமணி ராமதாஸின் கருத்து மற்றவர்கள் எள்ளி நகையாடும் அளவிற்குத் தான் உள்ளது. இது போன்ற கருத்துகளைச் சொல்லி சிறுமைப்படுத்துகின்ற வேலையை எதிர்காலத்தில் அவர் செய்யவேண்டாம். அதிமுகவை வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அவர் ஒன்றை சொன்னால் அதிமுக சார்பில் 100-ஐ சொல்வோம்" என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அன்புமணி ராமதாஸ் பேசியதற்குப் பதில் தெரிவித்திருந்தார்.

ஜெயக்குமாரின் இந்த கருத்து குறித்து பாமக கட்சி தலைமை தற்போது வரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞருமான பாலு, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது,'பாமக எப்போதும் வரலாறுகளை திரித்துக் கூறவில்லை. அதிமுகவும், திமுகவும், பெரும்பான்மை இல்லாத நிலையில் பாமகவின் ஆதரவால் தான் பெரும்பான்மையை பெற்று ஆட்சியை பிடித்துள்ளது.

கடந்த 1996-ம் ஆண்டு தமிழகத்தில் பெரும்பான்மை இல்லாத ஜெயலலிதா, நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு பாமக ஆதரவு தர வேண்டும் என கோரிக்கை வைத்தார். பெரும்பான்மையும், வலுவான கட்சியுமாக இல்லாமல் இருந்தால் ஏன் பாமக-வுடன் கூட்டணியை ஜெயலலிதா விரும்பினார்.

அரசியல் நாகரிகம் கருதி அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில், பாமக எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை. அதுபோல முன்னாள் அமைச்சரும் தனது தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிக்காமல் இருப்பது நல்லது. கூட்டணி குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. தேர்தலுக்கு முன்பாக கூட்டணி யாருடன் என்பதை கட்சி தலைமை அறிவிக்கும்' என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாலியல் தொல்லைக்கு திமுக அரசு துணை போகிறதா? - ஓபிஎஸ் காட்டம்

Last Updated : Jan 3, 2023, 9:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details