2019 - 2020-ம் ஆண்டிற்கான மாநில நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதி அறிக்கையை சென்னையில் உள்ள பா.ம.க தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர், மருத்துவர். ராமதாஸ் இன்று வெளியிட்டார். அப்போது பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உடன் இருந்தனர். இந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விக்கும் பதில் அளித்தனர்.
பாமக நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்! - ramadoss
பாட்டாள் மக்கள் கட்சியின் 2019-20ம் ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கையை, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
இந்த நிழல் நிதிநிலை அறிக்கை குறித்து பேசிய மருத்துவர். ராமதாஸ் , " இந்த அறிக்கை அரசுக்கு உதவியாக இருக்கும். 102 தலைப்புகளில் 401 அம்சங்கள் இந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ளது. இவற்றுள் வேலையில்லா திண்டாட்டத்தை எப்படி ஒழிப்பது என்பது முக்கியமான ஒன்று. 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பு திண்டாட்டம் தற்போது உள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது. 35 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பை பெறுவதற்கு சிறப்பு குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். வேலை இல்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.2000, தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.1000 உதவித்தோகையும். 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.3000, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4000, பட்ட மேற்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.5000 வழங்க வேண்டும் என்பது போன்ற அம்சங்களும். விவசாயத்தின் மூலதன மானியம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி அதில் 1 ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களுக்கு ரூ.10,000, 5 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு ரூ.50,000 கிடைக்கும் வகையில் திட்டமிட்டுள்ளோம். வறுமைக்கோட்டுக்கு கீழே இருக்கும் 35 லட்ச மக்களுக்கு மாதம் ரூ.2500 வழங்க வேண்டும் என்ற ஆலோசனைகளும் இடம் பெற்றுள்ளன. இதனால் அரசுக்கு பெரிய செலவு ஏற்பட்டுவிட போவதில்லை." என்று கூறினார்.
மேலும், அவர் " பெண்களுக்கு 18 வயதாகும் போது 5 லட்ச நிதி வழங்க வேண்டும். அதற்கேற்ப அரசு பணம் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 72.26 லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்துவிட்டு காத்துக்கிடக்கின்றனர். அவர்களுக்கு சுய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் ஆகியவையும் அதில் இடம்பெற்றுள்ளது" என்று தெரிவித்தார்.