சென்னை:தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பள்ளிகளோட வசதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஏழை, நடுத்தர மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் நிலையில், அக்குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளின் கல்வி எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
பொருளாதாரச் சூழல்களால் தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் அரசுப் பள்ளிகளில் படிக்கலாம் என்றாலும் அது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதது வருத்தமளிக்கிறது.
தனியார் பள்ளிகளில் கட்டணம் கட்டி மாணவர்களால் தொடர்ந்து படிக்க முடியாத நிலையில், அவர்களுக்கு அடுத்துள்ள வாய்ப்பு அரசுப் பள்ளிகளில் சேர்வது தான்.
வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளுக்குச் செலுத்த வேண்டிய கட்டணத்தைச் செலுத்தி மாற்றுச் சான்றிதழ் பெற்று, குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து விட்டுள்ளனர்.
மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்:
ஆனால், தனியார் பள்ளிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகையை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு அத்தகைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அரசுப் பள்ளிகளிலும் சேர்க்க முடியாமல், தனியார் பள்ளிகளிலும் கல்வியைத் தொடர முடியாமல் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையான குழந்தைகள் வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்த வாய்ப்புகள் உள்ளன.
இதனால், பொருளாதார நெருக்கடி காரணமாக தனியார் பள்ளிகளில் படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் மாற்றுச் சான்றிதழ் இல்லாமலேயே அரசுப் பள்ளிகளில் சேர்வதற்கான வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக ஒவ்வொரு அரசுப் பள்ளி சார்பிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்களில் ஒலிப்பெருக்கி கட்டி, இந்த வசதி குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி வசதியில்லாத மாணவர்கள் கட்டணம் செலுத்த முடியாத நிலையில், தனியார் பள்ளிகளில் தொடர்ந்து படிக்க விரும்பினால், அவர்களை அனுமதிக்க வேண்டும் என அரசு ஆணையிட வேண்டும்.
அவர்களிடம் கட்டணத்தைப் பின் நாள்களில் கூட வசூலித்துக் கொள்ளலாம். தற்போதைக்கு பொருளாதார நெருக்கடியால் எந்த குழந்தையின் கல்வியும் தடைபடாமல் இருக்க வேண்டும். இதற்கு அரசு உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கரோனா உயிரிழப்பு; வெள்ளை அறிக்கை வெளியிடுக' - சீமான்