தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவப் படிப்பில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ராமதாஸ் பிரதமருக்கு கடிதம்!

சென்னை: மருத்துவப் படிப்பு அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

By

Published : Jul 28, 2020, 3:10 PM IST

இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு) சட்டம் - 2006 நிறைவேற்றப்பட்ட பிறகு 2010&11ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுவருகிறது.

மத்திய அரசின் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தும் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அலுவலகம்தான், அகில இந்திய தொகுப்புக்கான இடங்களுக்கும் மாணவர் சேர்க்கையை நடத்துகிறது. அவ்வாறு இருக்கும்போது, அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு மட்டும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவது எந்த வகையிலும் நியாயமில்லை என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டுவருவதற்கு விரும்புகிறேன்.

அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் தனியாக உருவாக்கப்படுவதில்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50விழுக்காடு இடங்களும், இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 15விழுக்காடு இடங்களும் ஒதுக்கீடு செய்யப்படுவதன் மூலம்தான் அகில இந்திய ஒதுக்கீட்டு தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவையும் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள்தான் எனும்போது, அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அதுதான் உண்மையான சமூகநீதியாக இருக்கும்.

மற்ற இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் அனைவருக்கும் உரிய இட ஒதுக்கீடு வழங்கப்படும்போது, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இந்த உரிமை மறுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அகில இந்திய தொகுப்பு உருவாக்கப்பட்ட நாளில் இருந்து பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாததால், அந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

அகில இந்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 11,000 மாணவர்கள் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவம் பயிலும் வாய்ப்புகளை இழந்து விட்டனர். 35 ஆண்டுகளாக உரிமைகளை இழந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் இனியும் பாதிக்கப்படக்கூடாது. எனவே, சென்னை உயர்நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கு வசதியாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவக் குழுவின் செயலாளர், இந்திய பல் மருத்துவக் குழுவின் செயலாளர்கள் கூட்டத்தை சுகாதார சேவைகளுக்கான தலைமைச் செயலாளர் மூலம் நடத்தி, உரிய முடிவுகளை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உரிய ஆணைகளை பிறப்பிக்கும்படி பிரதமர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க...சாத்தான்குளம் போலீஸ் தாக்கியதில் மரணம்? - இறந்தவர் உறவினர்களிடம் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details