தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' தேசிய கட்சிக்கு வலிமையையும், மாநில கட்சிக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும் - உயர்நிலைக்குழுவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்! - பாமக

Anbumani Ramadoss: ஒரே நாடு ஒரே தேர்தல் தேசிய கட்சிக்கு வலிமையையும், மாநில கட்சிக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும் என உயர்நிலைக் குழுவுக்கு பாமக கட்சி தலைமர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.

pmk-party-leader-anbumani-ramadoss-write-a-letter-to-one-nation-one-election-commitee
'ஒரே நாடு' 'ஒரே தேர்தல்' தேசிய கட்சிக்கு வலிமையையும், மாநில கட்சிக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும் - உயர்நிலைக்குழுவுக்கு அன்புமணி ராமதாஸ் கடிதம்!

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 17, 2024, 10:46 PM IST

சென்னை: ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அமைப்பட்டுள்ள உயர்நிலைக்குழுவுக்கு பாமக கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதல் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், "543 தொகுதிகளைக் கொண்ட நாடாளுமன்ற மக்களவை, 28 மாநில சட்டப்பேரவைகள், 3 யூனியன் பிரதேச சட்டப்பேரவைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா, ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு முறை ஏதேனும் ஒரு தேர்தலை சந்தித்து வருகிறது.

தேர்தல் காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் நடத்தை விதிகள் காரணமாக வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. அதுமட்டுமின்றி, அடிக்கடி தேர்தல் நடத்துவதால் பல்லாயிரம் கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. இவற்றையெல்லாம் ஒரே நாடு, ஒரே தேர்தல் தடுக்கும் என்ற கருத்து பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்படுகிறது.

அதேநேரத்தில் மக்களவையும், மாநில சட்டப்பேரவைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளை அடிப்படையாக கொண்டு செயல்படும் அமைப்புகள் ஆகும். அரசியல் காரணங்கள் மற்றும் அரசியல் மாற்றங்களால் மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் மாறுபடக் கூடும். இந்திய நாட்டு வாக்காளர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் விடைகள் காணப்பட வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை ஏற்கனவே இந்தியாவில் அறிவிக்கப்படாமல் சோதித்து பார்க்கப்பட்ட முறை தான். இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்ட பிறகு 1952ஆம் ஆண்டில் முதல் முறையாக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தத்துவத்தின்படி தான் மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒன்றாக தேர்தல் நடத்தப்பட்டது.

மாநில சட்டப்பேரவைகளில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருந்தவரை எந்த சிக்கலும் இல்லை. 1972ஆம் ஆண்டு வரை மக்களவைக்கும், சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. ஆனால், அதன்பின் பல மாநிலங்களில் அமைக்கப்பட்ட எதிர்க்கட்சி அரசுகள், அவற்றின் பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்பாகவே கலைக்கப்பட்டதால் தேர்தல் அட்டவணை சிதைந்தது. அதன்பின் ஐம்பதாண்டுகளுக்கு மேலாகியும் அதை இன்று வரை சரி செய்ய முடியவில்லை.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப் படுத்தப் பட்டால் 6 மாதங்களுக்கு ஒருமுறை நாடாளுமன்றத்தின் ஒப்புதலுடன் நீடிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் தான் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீட்டிக்க முடியும். அது போன்ற சூழ்நிலையில் தேர்தல் எப்போது நடைபெறும்.

நாடாளுமன்ற மக்களவையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலில் மத்திய அரசு கவிழ்ந்தால், உடனடியாக தேர்தல் நடத்தி புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவ்வாறு மக்களவைக்கு தேர்தல் நடத்தப்படும் போது இந்தியா முழுவதும் உள்ள 28 மாநில சட்டப்பேரவைகளும், 3 யூனியன் பிரதேச சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுமா? மாறாக மக்களவைக்கு மட்டும் நடத்தப்பட்டால் ஒரே நாடு, ஒரே தேர்தல் தத்துவத்திற்கு என்ன பொருள்?

இந்தியாவில் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்திற்கும், சட்டப்பேரவைக் காலத்திற்கும் இடையிலான வித்தியாசம் 5 மாதங்கள் முதல் 56 மாதங்கள் வரை உள்ளன. எந்தவொரு காலகட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டாலும் சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை அதிக அளவாக 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கவோ, குறைக்கவோ வேண்டிய தேவை ஏற்படும். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை குறைப்பது மக்கள் அளித்தத் தீர்ப்புக்கு அவமரியாதை செய்ததாக ஆகாதா?

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையில் பல நன்மைகள் இருப்பதை மறுக்க முடியாது. அவற்றினால் கிடைக்கும் நன்மைகளை விட ஜனநாயகத்தின் கூறுகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியமாகும்.

அதேநேரத்தில் ஒரே நாடு, ஒரே தேர்தல் தத்துவத்தின் நோக்கமாக கூறப்படுபவை வளர்ச்சிப்பணிகள் தடைபடுவதை தடுக்கலாம், தேர்தலுக்காக பெருமளவில் செலவு செய்யப்படுவதை குறைக்கலாம் ஆகியவை தான். இந்த உன்னத நோக்கங்களை எட்டுவதற்காக பாமக சார்பில் சில யோசனைகளை உயர்மட்டக் குழுவின் ஆய்வுக்காக முன்வைப்படுகிறது.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் கவிழ்வதற்கான காரணங்களில் முதன்மையானது கட்சித்தாவல் ஆகும். ஒரு கட்சியிலிருந்து மூன்றில் இரு பங்கினர் பிரிந்து சென்று தனி அணியை உருவாக்குவதை இந்திய அரசியலமைப்பு சட்டமே அனுமதிக்கிறது. அவ்வாறு பிரிந்து செல்லும் போது அரசுகள் கவிழ்வதையும், தேவையில்லாமல் தேர்தல் நடத்துவதையும் தவிர்க்க முடியாது. இதற்கு சிறந்தத் தீர்வு விகிதாச்சார பிரதிநிதித்துவம்.

விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை அறிமுகப்படுத்தப்படும் போது, கட்சி தான் முன்னிறுத்தப்படுமே தவிர தனிநபர்கள் முன்னிறுத்தப்பட மாட்டார்கள். தேர்தலில் ஒவ்வொரு கட்சியும் பெறும் வாக்குகளின் அடிப்படையில் ஒவ்வொரு கட்சிக்கும் உறுப்பினர் எண்ணிக்கை ஒதுக்கப்படும்.

அதற்கேற்ற வகையில், ஒவ்வொரு கட்சி சார்பிலும் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்ட பட்டியலில் உள்ளவர்கள் சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள். இந்த முறையில் ஒருவர் கட்சித் தாவினாலோ அல்லது உயிரிழந்து விட்டாலோ, அவருக்கு பதிலாக பட்டியலில் அடுத்த வரிசையில் உள்ளவர் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவார் என்பதால் கட்சித் தாவலுக்கோ, இடைத்தேர்தலுக்கோ வாய்ப்பு இருக்காது.

அதுமட்டுமின்றி, இம்முறையில் வாக்களிக்கும் அனைத்து மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவமும் கிடைக்கும். இந்தியாவைச் சுற்றியுள்ள இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 87 நாடுகளில் இம்முறை தான் கடைபிடிக்கப் படுகிறது. இந்தியா போன்ற பலகட்சி அரசியல் முறை உள்ள நாடுகளுக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் தான் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று பா.ம.க. கருதுகிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் முறைக்கு விகிதாச்சார பிரதிநிதித்துவம் மிகவும் வலு சேர்ப்பதாக இருக்கும். அதனால் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த உயர்நிலைக் குழு பரிந்துரைக்க வேண்டும். இந்தியாவில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள், உள்ளாட்சி மன்றங்கள் என மூன்றடுக்கு ஆட்சி முறை உள்ளது. இவற்றில் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதும், அதிலிருந்து இரண்டரை ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதும் சரியாக இருக்கும்.

மக்களவைத் தேர்தல்களில் தேசிய அளவிலான சிக்கல்களை முன்வைத்தும், சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாநில அளவிலான சிக்கல்களை முன்வைத்தும் பரப்புரை செய்யப்படும். இந்த இரு தேர்தல்களையும் ஒன்றாக நடத்தும் போது தேசிய அளவிலான சிக்கல்கள் தான் முதன்மைப் படுத்தப்படும். அதனால், மாநில அளவிலான சிக்கல்கள் எடுபடாது. இது தேசிய கட்சிகளுக்கு கூடுதல் வலிமையையும், மாநில கட்சிகளுக்கு பலவீனத்தையும் ஏற்படுத்தும். இது நியாயமான, நேர்மையான, சமவாய்ப்புடன் கூடிய தேர்தல் என்ற தத்துவத்திற்கு எதிரானதாக அமைந்துவிடும்.

மாறாக, மக்களவைத் தேர்தலை ஒரே நேரத்திலும், அதன்பின் இரண்டரை ஆண்டுகள் கழித்து சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை ஒன்றாகவும் நடத்தும் போது, மக்களவைத் தேர்தல்களை தேசிய பிரச்சினைகளின் அடிப்படையிலும், சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களை மாநில மற்றும் உள்ளூர் பிரச்சினைகளின் அடிப்படையில் எதிர்கொள்ள முடியும். இந்த முறையில் அனைத்துக் கட்சிகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதுடன், தேர்தலை நடத்துவதற்கான செலவுகளையும் பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை படையினர்: மத்திய அமைச்சர் கடிதம் அனுப்பிய முதல்வர் ஸ்டாலின்..

ABOUT THE AUTHOR

...view details