தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த வரும்படி தமிழ்நாடு அரசு அழைப்புவிடுத்திருந்தது. அதையேற்று பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையிலான மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று (ஜன. 08) முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோரைச் சந்தித்துப் பேசினர். இது குறித்து நல்ல முடிவை எதிர்பார்ப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
வன்னியர்களுக்கு 20 விழுக்காடு தனி இட ஒதுக்கீடு கேட்டு பாமக தொடர் போராட்டங்களை நடத்திவருகிறது. நேற்று மாநகராட்சி, நகராட்சி, கோட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு பெருந்திரளாகப் போராட்டம் நடத்தி மனு கொடுத்தார்கள். இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக அரசுத் தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை.
இது குறித்து நாளை (ஜன. 09) கட்சியின் உயர்மட்ட குழுவினருடன் காணொலி வாயிலாக ராமதாஸ் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக பாமகவின் அடுத்தகட்ட செயல்பாடு குறித்து முடிவுசெய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.