இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் அரசு பள்ளிகளில் படித்து பட்டப்படிப்பு பட்டயப்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் அவர்கள் படிப்பை முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என்ற உன்னதமான திட்டத்தை அறிவித்துள்ள தமிழக அரசு, ஏழைப்பெண்களுக்கு தங்கத்தாலி உள்ளிட்ட திருமண உதவி திட்டத்தை ரத்து செய்திருக்கிறது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை, தமிழகத்தின் சராசரி உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை விட குறைவாக இருப்பது உண்மை தான். அந்த விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும், பெண்கள் அதிக எண்ணிக்கையில் உயர்கல்வி கற்பதை உறுதி செய்யும் வகையிலும் மாதம் ரூ.1000 வழங்குவது பாராட்டப்பட வேண்டியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதற்காக மாணவிகள் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம்.
ரத்து
மாணவிகளுக்கு நிதி வழங்குவதற்காக, தமிழகத்தில் இதுவரை செயல்படுத்தப்பட்டு வந்த மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் என்ற பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதாவது திருமண நிதியுதவி திட்டம் ரத்து செய்யப்பட்டு விட்டது; இனி யாருக்கும் இத்திட்டத்தின்படி தாலியும், நிதியும் வழங்கப்படாது.
பாதிப்பு
தமிழ்நாட்டில் மொத்தம் 5 வகையான திருமண நிதியுதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன. அவற்றில் ஈ.வே.ரா. மணியம்மையார், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, அன்னை தெரசா, டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் ஆகியோர் பெயரில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் சிறப்புப் பிரிவினருக்கான திட்டங்கள் ஆகும். அதை தொடருகின்றன. ஆனால், பொதுப்பிரிவினருக்கான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் தான் ரத்து செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை மிகவும் அதிகம் என்பதால், அதிக எண்ணிக்கையிலானவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின்படி, ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களின் திருமணத்திற்கு தமிழக அரசின் சார்பில் ஒரு பவுன் தங்கம் வழங்கப்படும்; அத்துடன் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரமும், மற்ற பெண்களுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும். அரசால் செயல்படுத்தப்படும் மேற்கண்ட 5 வகையான திருமண உதவித் திட்டங்களால் 2020-21 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 8,373 பெண்கள் பயனடைந்துள்ளனர். இவர்களில் ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் மூவலூர் இராமாமிர்தம் திருமண நிதியுதவித் திட்டத்தின்படி பயனடைந்தவர்கள் என்பதில் இருந்தே அத்திட்டத்தின் பயன்களையும், அது தொடர வேண்டியதன் தேவையையும் அறிந்து கொள்ளலாம்.