கரோனா ஊரடங்கு காரணமாக ஏற்பட்ட பொருளாதார முடக்கத்தை, பொது மக்கள் சமாளிக்கும் பொருட்டு வங்கிக் கடன் தவணை செலுத்த ஆறு (2020 மார்ச் முதல் ஆகஸ்ட் வரை) மாத காலம் நீட்டித்து ரிசர்வ் வங்கி சலுகை வழங்கியது.
மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆறு மாத தவணைக் காலத்தில் வட்டிக்கான வட்டி தொகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டிருந்தது.
இதையடுத்து, பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின் இரண்டு கோடி ரூபாய்க்கும் கீழ் கடன் பெற்றவர்கள் ஆறு மாத கால தவணைக்கான வட்டிக்கு வட்டி தொகையை செலுத்த வேண்டியதில்லை, அதற்கு தளர்வு அளிக்கப்படும் என நீதிமன்றத்தில் மத்திய நிதித்துறை பதிலளித்து, அதற்கான வழிகாட்டு நடைமுறையையும் வெளியிட்டது.
நிதித்துறையின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், "ஒத்திவைக்கப்பட்ட வீட்டுக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன் தவணைகளுக்கும் வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதும், தவணை செலுத்தியவர்களுக்கு கருணைத்தொகை அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கவை. எதிர்பார்த்த பயன் இல்லாவிட்டாலும் மத்திய அரசின் அறிவிப்பு பாராட்டத்தக்கது" எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசை பாராட்டிய ராமதாஸ்