தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“பிற மாநில தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும்” - ராமதாஸ் வலியுறுத்தல் - pmk founder ramadoss

சென்னை: பிற மாநில தமிழ்ப் பள்ளிகளின் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

ramadoss
ramadoss

By

Published : Jun 26, 2020, 8:30 PM IST

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மற்றும் புதுவையில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தைப் பின்பற்றும் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் தமிழகத்திற்கு அப்பால் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த நீதி வழங்கப்படாதது அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி குறித்து தமிழக அரசு இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. மராட்டியம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் சுமார் 300 தமிழ்ப் பள்ளிகள், தமிழ் சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளால் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த பள்ளிகளில் தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளைப் பொறுத்தவரை தமிழக அரசின் தேர்வுத்துறை அதிகாரிகள் தான் அங்கு சென்று தேர்வுகளை நடத்துவார்கள். அதனடிப்படையில், தமிழக அரசின் தேர்வுத்துறை தான் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்.

ஆனால், தமிழ்நாட்டில் தற்போது பத்தாம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அனைவருக்கும் தேர்ச்சி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சலுகை வெளிமாநில தமிழ்ப் பள்ளிகளுக்கு நீட்டிக்கப்படவில்லை. இதற்கான முக்கியக் காரணம், தமிழ்நாடு, புதுவை தவிர பிற மாநிலங்களில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அனைவரும் தனித்தேர்வர்களாகக் கருதப்படுவது தான்.

பள்ளிகள் மூலம் தேர்வு எழுதும் மாணவர்கள், அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு கொள்கை முடிவை அறிவித்துள்ள போதிலும், தனித்தேர்வர்களின் தேர்ச்சி பற்றி இதுவரை எந்த முடிவும் எடுக்காததால், வெளிமாநில தமிழ்ப் பள்ளிகளின் பத்தாம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சியில் குழப்பம் நிலவுகிறது.

எனவே, தமிழ்நாடு மற்றும் புதுவை மாணவர்களைப் போலவே பிற மாநிலங்களில் உள்ள தமிழ்வழிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அவர்கள் 11ஆம் வகுப்பில் சேர வசதியாக அடுத்த மாத இறுதிக்குள் மதிப்பெண் சான்றிதழ்களையும் வழங்கி, அவர்களின் எதிர்காலம் வீணாகி விடாமல் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details