சென்னை:உலக அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நாளை முதல் தொடங்குகின்றன.செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான தொடக்கவிழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துகொள்வதற்காக இரண்டுநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அகமதாபாத்தில் இருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் சற்றுமுன் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளார்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பாரம்பரியமான வேட்டியில் சதுரங்க கரை அணிந்தும் துண்டு அணிந்தும் வருகை தந்துள்ளார்.
சென்னை வந்து உள்ள பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ரவி பச்சமுத்து, கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலாளர் இறையன்பு, ஏ.சி.சண்முகம், பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினர்கள் நைனார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் மற்றும் பாஜக செயர்குழு மதுவந்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து வரவேற்புகளை ஏற்றுக் கொண்ட பிரதமர் மோடி, விமானம் தாமதமாக சென்னை வந்ததால் 25 நிமிடம் விமானத்தில் ஓய்வு எடுப்பதாக இருந்ததை கேன்சல் செய்துவிட்டு சென்னை விமானநிலையத்திலிருந்து தனி ஹெலிகாப்டரில் ஐஎன்எஸ் அடையாறு செல்கிறார். அங்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, குஷ்பு ஆகியோர் வரவேற்கின்றனர்.
பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்று பிரதமர் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்வில் கலந்து கொள்கிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகை ஒட்டி ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடி நாளை 29ஆம் தேதி அன்று அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு நாளை காலை 11.55 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையத்தில் வழி அனுப்பும் நிகழ்ச்சியை முடித்துவிட்டு இந்திய விமானப்படை தனி விமானத்தில் அகமதாபாத் புறப்பட்டு செல்கிறார்.
இதையும் படிங்க:Watch Video: செஸ் விளையாட்டின் பிரதிபலிப்பாய் கலைஞர்களின் அற்புத நடனம்