இதுகுறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மக்களாட்சி மாண்புகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாய் தமிழ்நாடு அரசு விளங்குகிறது. துரைப்பாக்கத்தில் செயல்படும் அரசு உதவிபெறும் டி பி ஜெயின் கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவை தொடர்ந்து நடத்திட வழி செய்த முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கும், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்கும் நன்றியும் வாழ்த்தும்.
தலைமுறை தலைமுறையாக கல்வி மறுக்கப்பட்டு, கல்வியிலும், சமூகத்திலும் பின்தங்கலுக்கு உள்ளான மக்களின் உயர்கல்விக்கான வாய்ப்பு வாசல் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளே. துரைப்பாக்கம், பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, கன்னகிநகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தினக் கூலித் தொழிலாளர்களின் குடும்பத்தில் இருந்து, பட்டப் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் முதல் தலைமுறை மாணவர்களின் கல்லூரி கனவிற்கு அப்பகுதியில் ஒரே நம்பிக்கையாக விளங்கிய கல்லூரிதான் துரைப்பாக்கம் டி பி ஜெயின் அரசு உதவிபெறும் கல்லூரி.
இந்தக் கல்லூரியின் அரசு உதவிபெறும் பிரிவுகளை மூடி, முழுக்க முழுக்க சுயநிதிக் கல்லூரியாக மாற்றிடக் கல்லூரி நிர்வாகம் எடுத்த முயற்சிகளை எதிர்த்து கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆசிரியர்களும் மாணவர்களும் போராடி வந்தனர். மாணவர், ஆசிரியர் அமைப்புகளின் கூட்டுப் போராட்டத்திற்கு இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட ஜனநாயக அமைப்புக்கள் ஆதரவு இயக்கங்களை நடத்தினார்கள். மீண்டும் அரசு உதவிபெறும் பிரிவுகளை தொடங்க நடந்த போராட்டங்களில் பொதுமக்கள் பெரும் அளவில் பங்கேற்றனர்.
நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் கல்லூரி நிர்வாகத்தின் சட்டத்திற்குப் புறம்பான செயல்பாடுகளை எதிர்த்தும், கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைத் தொடங்க வலியுறுத்தியும், பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தியும், கடந்த இரண்டு வருடங்களாகத் தொடர்ந்து நடந்த போராட்டம் முன்வைத்தக் கோரிக்கைகளின் நியாயங்களை உணர்ந்து "மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற அண்ணாவின் வழியில் முதலமைச்சர் ஸ்டாலின் கல்லூரியில் அரசு உதவிபெறும் பிரிவுகளை தொடங்கிட உத்தரவிட்டுள்ளது, மக்களாட்சி மாண்புகளுக்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.