சென்னை:நெகிழிப் பொருள்களை ஒழிப்பது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து, சென்னை கோயம்பேடு பழ அங்காடியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டன.
இதில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை முதன்மைச் செயலர் சுப்ரியா சாஹு, சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டு வியாபாரிகளுக்குத் துணிப்பை, துண்டுப்பிரதிகளை விநியோகம் செய்தனர்.
நெகிழி விழிப்புணர்வு
பின்னர், செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய ககன்தீப் சிங், "சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அதன்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி இணைந்து முதற்கட்டமாக கோயம்பேடு அங்காடியில் நெகிழி விழிப்புணர்வு தொடங்கியுள்ளோம்.
மேலும், நெகிழிப் பயன்பாடு தொடர்பாக ஆய்வுசெய்வதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டு தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன்படி ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதியில், இரண்டாயிரத்து 172 கிலோ கிராம் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்செய்யப்பட்டு ஐந்து லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
488 கிலோ நெகிழி பறிமுதல்
அதேபோல் செப்டம்பர் மாதம் 488 கிலோ நெகிழி பறிமுதல்செய்யப்பட்டு ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துபவர்களுக்குத் தண்டனை அளிப்பது என்பது இதற்குத் தீர்வு அல்ல. விழிப்புணர்வு ஏற்படுத்தி நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. வியாபாரிகளும் ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தனர்.
நெகிழி உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது. வரும் நாள்களில் கோயம்பேடு அங்காடியை மேலும் சிறப்பாக உயர்த்த சிஎம்டிஏ அலுவலர்களுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்தார்.
பழங்காலத்தை ஏன் மீண்டும் கொண்டுவர முடியாது?
முன்னதாக மேடையில் உரையாற்றிய சுப்ரியா சாஹு, "சுற்றுச்சூழல், வனவிலங்குகளைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் கடமை. அனைத்து விலங்குகளும் நெகிழிப் பொருள்களை உட்கொண்டுவருகின்றன.
அனைத்து இடங்களிலும் நெகிழி சிறிய அளவிலாவது இருக்கிறது. பழங்காலத்தை ஏன் மீண்டும் கொண்டுவர முடியாது? நெகிழி அடுத்துவரும் சந்ததியினரான குழந்தைகள், இயற்கைக்கு மிகவும் ஆபத்தானது.
நெகிழிப் பைகளைத் தடைசெய்வது மிகவும் சிறந்தது. நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்த மாட்டோம் என அனைவரும் உறுதிமொழி எடுத்துச் செயலாற்ற வேண்டும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க : லாரி சர்வீஸ் உரிமையாளர் வெட்டிப் படுகொலை!