சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று (ஜூன் 9) காலை மீன்பிடிப்பதற்காக ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் சார்லஸ் (41), காந்தி (47), ஜானி (40), வேல்முருகன் (44), பொன்னுசாமி (60) உள்பட 5 பேர் மீன்பிடிக்க கடலுக்குள் சென்றனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவளத்திலிருந்து 40 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டிந்தபோது அலையில் தாக்கத்தால் தாக்குபிடிக்க முடியாமல் பைபர் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகு, கேனை பிடித்து கொண்டு மீனவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
கடலில் தத்தளித்த மீனவர்கள் பத்திரமாக மீட்பு இன்று (ஜூன் 10) காலை அந்த பக்கமாக சென்ற கிழக்கு கடற்கரை சாலை பகுதியை சேர்ந்த மீனவர்கள், விபத்து குறித்து காசிமேடு மீனவர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்தத் தகவலையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் 4 பைபர் படகுகளில் சென்று கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த மீனவர்களை பத்திரமாக மீட்டு காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதிக்கு அழைத்து வந்தனர்.
கரைக்கு திரும்பிய மீனவர்களை ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் எபினேசர் உள்பட பலர் வரவேற்று நலம் விசாரித்து தேவையான உதவிகளை வழங்கினர். தொடர்ந்து மீனவர்களை மருத்துவ சிகிச்சைக்காக தண்டையார்பேட்டையில் உள்ள சின்ன ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.