சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நிஜாமுதீன். இவருக்கு கடந்த மாதம் நான்காம் தேதி மெட்ரோ ரயில் பணி உள்ளதாக கூறி மாதம் 15,000 ரூபாய் சம்பளம் எனவும் இவரது எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
மெட்ரோவில் வேலை.. மாதம் ரு.15 ஆயிரம் சம்பளம்..! - ரூ. 1.50 லட்சம் ரூபாய் பறிகொடுத்த நபர்! - chennai work fraud
சென்னை: மெட்ரோ ரயிலில் வேலை வாங்கி தருவதாக கூறி செல்போனில் வந்த போலி குறுஞ்செய்தியை நம்பி இளைஞர் ஒருவர் ரூ.1.50 லட்சத்தை பறிகொடுத்துள்ளார்.
பின் அந்த எண்ணிற்கு போன் செய்த நிஜாம் முதீன் விரிவான தகவல் கேட்டு உள்ளார். அப்போது அவரது சான்றிதழ்களை அனுப்பும்படி அந்த எண்ணில் மறுபுறத்தில் பேசிய நபர் கூறியுள்ளார். அதன்படியே இவரது சான்றிதழ் மற்றும் அவருடைய தம்பி சதாம் உசேன் சான்றிதழையும் அனுப்பியுள்ளார்.
அதன்பிறகு சிலதினங்கள் கழிந்து டெல்லி மெட்ரோவில் இருந்து பேசுவதாக ஒரு நபர், நிஜாமுதீன் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, அவர் மெட்ரோ பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார், அதற்கு முதற்கட்டமாக 37 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் கூறி பணம் கேட்டுள்ளார். அதனை தொடர்ந்து அதே போல் பல கட்டங்களாக சிறிய சிறிய தொகையாக 1.50 லட்சம் ரூபாய் வரை பணத்தை வங்கி மூலம் பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர் தபால் மூலம் பணிநியமன ஆணை ஒன்றை நிஜாம் முதீன் வீட்டு முகவரிக்கு அனுப்பியுள்ளார். அதனை எடுத்துக்கொண்டு நிஜாமுதீன் சென்னை கோயம்பேடு மெட்ரோ நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த அதிகாரிகள் இந்த பணி நியமன ஆணை போலியானது என கூறியுள்ளனர்.
இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த நிஜாமுதீன் உடனே சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.