சென்னை: மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று (அக். 2) தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் சார்பில் மத நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் ஜி. ராமகிருஷ்ணன், பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
'வெறுப்பு அரசியல் உருவாக பாஜகதான் காரணம்' சாதி பின்னணி
இந்நிகழ்ச்சியில் பீட்டர் அல்போன்ஸ் பேசியதாவது, "கடந்த சில நாள்களில் இந்தச் சமூகம் வன்முறையாக மாறிவருகிறது. இந்தச் சகிப்பின்மை, வெறுப்பு அரசியல் உருவாக பாஜகதான் காரணம்.
ருத்ர தாண்டவம் படத்தைப் பார்க்க ஒரு சமூகத்தினர் ஊர்வலமாகச் செல்கின்றனர். அந்த இளைஞர்கள் முகத்தில் கோபம், வெறுப்பு தெரிகிறது. எதற்காக இந்தப் படத்திற்கு ஆரவாரம் என்றால் ஒரு சாதி பின்னணி. இந்தப் படத்தைப் பார்க்க ஒரு அரசியல் தலைவர் பரப்புரை செய்கிறார்.
ஆறாயிரம் கோடி ரூபாய் பாஜகவிற்கு நன்கொடை வந்துள்ளது. கொடுத்தது யார் என்று தேர்தல் ஆணையம்கூட தெரிந்துகொள்ள முடியாத அளவிற்குச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால் காந்தி இந்தியாவிற்கு சுதந்திரமே வேண்டாம் என்று கூறியிருப்பார்" என்றார்.
காந்தி சிந்தனைக்கு எதிரான அரசியல்
டி.எம். கிருஷ்ணா பேசியதாவது, "இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காந்தியைப் பற்றி படித்துள்ளோம். ஆனால் அவரது கொள்கை, சிந்தனை ஏன் பரவவில்லை? 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு காந்தி சிந்தனைக்கு எதிரான அரசியல் நடக்கிறது. பாஜகவைப் பொறுத்தவரை வன்முறையைக் கொள்கையாகக் கொண்டுள்ளது. முற்போக்குச் சிந்தனை உள்ள நாம் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே இந்தத் தடையை உடைக்க முடியும்" என்றார்.
காந்தி படுகொலை
ஜி. ராமகிருஷ்ணன் பேசுகையில், "மதக் கலவரங்களைத் தடுத்தவர் என்ற காரணத்தால்தான் காந்தி படுகொலைசெய்யப்பட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கியபோது கெட்டவர்கள் ஆட்சிக்கு வந்தால் ஆபத்து ஏற்படும் எனச் சொன்னார். அப்படிப்பட்ட ஆட்சிதான் இப்போது மத்தியில் நடக்கிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:கொளந்தானூர் அடுக்குமாடி குடியிருப்பு பழுது - உடனடியாக குடியிருப்பு வாசிகள் வெளியேறும்படி நோட்டீஸ்!