தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னையில் தனியார் நகர பேருந்துகளுக்கு அனுமதி! எம்டிசி புதிய திட்டம்? - Transport Corporation

சென்னையில் தனியார் நகர பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி
தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி

By

Published : Mar 5, 2023, 11:15 AM IST

தலைநகர் சென்னையில் 625 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 436 அரசு பேருந்துகள், மாநகர போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்பட்டு வருகிறது. தினசரி சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இதில், பெண்களுக்கான கட்டணம் இல்லா சேவை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸ், முதியவர்களுக்கான சிறப்பு சலுகை, மற்றும் 30 நாட்கள் விருப்பம் போல் பயணம் செய்யும் பயணச்சீட்டு உள்ளிட்ட திட்டங்களை மாநகர் போக்குவரத்துக் கழகம் செயல்படுத்தி வருகிறது.

தொடர்ந்து, சென்னை பஸ் ஆப் செயலி, பேருந்துகளில் ஒலிப்பெருக்கி போன்ற மக்களுக்கு பயன் தரக்கூடிய திட்டங்களையும் மாநகர போக்குவரத்து கழகம் செயல்படுத்தி வருகிறது. போதுமான அரசு பேருந்துகள் இயக்கப்பட்டாலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உள்ளது. இந்நிலையில், சென்னையில் அரசு பேருந்துகள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் தற்போது தனியார் பேருந்துகளையும் இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் மொத்த செலவு ஒப்பந்தம் (Gross Cost Contract) என்ற முறையில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது இயங்கி வரும் மாநகர் போக்குவரத்துக் கழக வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அனுமதி வழங்கப்பட தனியார் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை சிட்டி பார்ட்னர்ஷிப் திட்டத்தின் கீழ் இந்த தனியார் பேருந்துகள் இயக்கும் திட்டமானது செயல்படுத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் நடப்பாண்டில் மட்டும் 500 பேருந்துகளையும், 2025ஆம் ஆண்டு 500 பேருந்துகளையும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மொத்த செலவு ஒப்பந்தம் என்பது, ஒரு கிலோ மீட்டருக்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்படும். அனுமதி வழங்கப்பட்ட தனியார் நிறுவனங்கள் தினசரி வசூல் ஆகும் தொகையை மாநகர் போக்குவரத்து கழகத்திடம் அளிக்க வேண்டும்.

நிர்ணயம் செய்யப்பட்ட தொகைக்கு அதிகமாக வசூல் செய்யப்பட்டால் அது மாநகர போக்குவரத்திற்கும், குறைவாக வசூல் செய்யப்பட்டால் போக்குவரத்து துறை தனியாருக்கும் கொடுக்கும் என்ற முறையை நடைமுறைபடுத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

மொத்த செலவு ஒப்பந்தம் என்ற முறையில் கொண்டு வர உள்ள மாநகர போக்குவரத்து கழகத்தின் திட்டத்திற்கு பல்வேறு போக்குவரத்து கழகங்களின் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மேலும் மும்பை போன்ற மாநிலங்களில் இதே போன்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு தோல்வி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீட்டுல ஒரே சண்டை சார்! - ஹோலிக்கு விடுமுறை கோரிய ஆய்வாளரின் கடிதம் வைரல்!

ABOUT THE AUTHOR

...view details