கரோனா தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு விநாயகர் சதுர்த்தியின் போது பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல் மற்றும் நீர் நிலைகளில் கரைக்கவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், தெருக்களில் விநாயகர் சிலையை வைக்க அனுமதி வழங்கக் கோரி தமிழ்நாடு கைவினை காகித கூழ் விநாயகர் சிலைகள் மற்றும் களிமண் பொம்மைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் முருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ரம்ஜான் பண்டிகைக்கும், தூத்துக்குடி பனிமயமாதா கோயில் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதால்,விநாயகர் சதுர்த்திக்கு சிலைகளை வைக்க அனுமதி வழங்கப்படும் என்ற நம்பிக்கையில் உற்பத்தியாளர்கள் ஏராளமான சிலைகளை செய்துள்ளனர்.
விநாயகர் சதுர்த்தியின் போது எப்படியும் சிலைகளை விற்று விடலாம் என்ற நம்பிக்கையில் கடன்வாங்கி சிலைகளை உருவாகியுள்ளோம். ஆனால், தற்போது அரசு விதித்துள்ள தடை உத்தரவால் மிகுந்த பொருளாதார பாதிப்புக்கு ஆளாக நேரிடும் சூழல் நிலவுவதால், காகிதக்கூழால் செய்யப்பட்ட சிலைகளை அடுத்த ஆண்டிற்கும் பயன்படுத்த முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல, விநாயகர் சதுர்த்தியின் போது தமிழ்நாடு முழுவதும் சிலைகள் வைக்கக்கூடாது என்ற அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரியும், அனுமதி இல்லாமல் சிலைகள் வைக்கும் இந்து முன்னணி அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.