சென்னை:தமிழ்நாட்டில் கட்டட அனுமதிப் பெறாமல் செயல்பட்டு வரும் 729 பள்ளிகள் மேலும் ஒராண்டிற்கு தொடர்ந்து செயல்படுவதற்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதியளித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணையில், ”தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பள்ளிகள் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அனுமதியை வாகனங்களை இயக்குவதற்கு பெற வேண்டும் எனவும், பள்ளிக்கட்டங்களுக்கான வரைபட அனுமதி உரிய அலுவலரிடம் முறையாகப் பெற்றப்பின்னரே கட்டடங்கள் கட்டப்பட வேண்டும் என அரசு ஆணையிட்டது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஏற்கனவே கட்டப்பட்டு இயங்கி வரும் பள்ளிகளில் உள்ளாட்சிகளின் அனுமதியைப் பெற்று செயல்பட்டு வந்தாலும், அந்தப் பள்ளிகள் நகர் மற்றும் ஊரமைப்பு துறை, உள்ளுர் திட்டக்குழுமம், சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தில் கட்டட வரைப்பட அனுமதி பெற்று சமர்பித்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 2022 மே 31 ஆம் தேதி வரையில் தொடர் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
பள்ளிக் கட்டட வரன்முறைக்கு விண்ணப்பித்த 811 பள்ளிகளில் 82 பள்ளிக்கு மட்டுமே உள்ளாட்சித்துறையால் அனுமதி வழங்கப்பட்டது. 729 பள்ளிகளுக்கு இன்னமும் உரிய அனுமதி உத்தரவு வழங்கப்படவில்லை. எனவே இந்தப் பள்ளிகளுக்கு 2022 ஜூன் 1 ஆம் தேதி முதல் 2023 மே 31 ஆம் தேதி வரை அனுமதி அளித்து, தொடர் அனுமதி, அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.
இதையும் படிங்க: சேகர் ரெட்டிக்கு சொந்தமான நிறுவனத்துக்கு வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு ரத்து