தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிரந்தரமாக கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க அரசு முன்வராது-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம்

அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை கைவிட வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

ஒ.பன்னீர்செல்வம்
ஒ.பன்னீர்செல்வம்

By

Published : Jun 23, 2023, 5:08 PM IST

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காத திமுக அரசிற்கு முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாடு உயர் கல்வி மற்றும் தொழில் கல்வியில் வளர்ச்சி அடைந்தால் மட்டுமே, புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சி பெறும். உயர் நிலைக் கல்வியால்தான் நாட்டின் வளர்ச்சியை உருவாக்க முடியும். அனைத்துத் துறைகளின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைவது உயர் கல்வியே.

இந்த வகையில், உலக அரங்கில் தமிழ்நாடு வீறு பெற்று, தனிச் சிறப்புடன் விளங்க வேண்டுமெனில், உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி வளர்ச்சி பெறுதல் மிகவும் அவசியம். இந்த இரண்டும் வளர்ச்சி பெற வேண்டுமெனில் கல்லூரிகளில் தரமான கட்டமைiப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, நிரந்தரமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். ஆனால், இதற்கு முற்றிலும் முரணான நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 3.5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்த திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு அவற்றை முறையாக நிரப்ப எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, பெரும்பாலான கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெரும்பாலான கல்லூரிகளில் பொறுப்பு முதல்வர் தான் இருக்கின்றனர்.

இதையும் படிங்க:முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சபாநாயகம் மறைவு: காவல் துறை மரியாதை வழங்க உத்தரவு!

இந்த நிலையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் 5ஆயிரத்து 699 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக மாதம் 20ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த திமுக அரசு ஆணை பிறப்பித்து இருப்பதைப் பார்க்கும்போது, நிரந்தரமாக கல்லூரிகளில் ஆசிரியர்களை நியமிக்க இந்த அரசு முன்வராது என்பது தெள்ளத் தெளிவாகிறது. திமுக அரசின் இந்தச் செயல் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதாக அமைந்துள்ளது.

மேலும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாகக் கூறும் முதலமைச்சர், அரசு காலிப் பணியிடங்களை முறையாக, நிரந்தரமாக நிரப்ப நடவடிக்கை எடுக்காதது சாத்தான் வேதம் ஓதுவது போல் அமைந்துள்ளது. மாதம் 20ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் அரசுக் கல்லூரிகளில் தற்காலிகமாக நியமிக்கப்படும்போது, நிரந்தர ஆசிரியர்களின் ஊதியத்தை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கையில், அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுவதோடு, பயிற்றுவிக்கும் ஆர்வமும் குறையும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் படிப்பும் பாதிக்கக்கூடும்.

பொதுவாகவே, பள்ளிகள், கல்லூரிகளுக்கு தொகுப்பூதியத்தின் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது என்பது உயர் கல்வியைப் பாதிக்கும் செயலாகும். மேலும், முனைவர் பட்டம், முதுநிலைப் பட்டம் பெற்றவர்களை எல்லாம் வெறும் 20ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிப்பது என்பது ஆசிரியர் தொழிலையே அவமதிப்பதற்கும் சமம். ஒருவேளை, தற்போது தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டாலும், ஒருசில ஆண்டுகள் கழித்து அவர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளையாவது அரசு வகுக்க வேண்டும். அப்பொழுதுதான், கவுரவ விரிவுரையாளர்களும் ஆர்வமாக பணியாற்றுவார்கள்.

இல்லையெனில், அவர்களுடைய ஆர்வம் குறைவதோடு, தனியார் கல்லூரிகளில் அதிக சம்பளத்தில் நிரந்தரப் பணி கிடைக்குமேயானால், அங்கு செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும். இதன் காரணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வி பாதிக்கப்படும்.

எனவே, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர் தரமான உயர் கல்வியைப் பெற்று அதன்மூலம் வேலைவாய்ப்பினை அடையும் வகையில், அரசுக் கல்லூரிகளில் ஆசிரியர்களை நிரந்தர அடிப்படையில் பணியமர்த்தவும், கவுரவ விரிவுரையாளர்களை நிரந்தரமாக்குவதற்கான வழிமுறைகளை வகுக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென்றும், தொகுப்பூதியத்தில் பணியமர்த்தும் முறையினை கைவிட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி வழக்கு: உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

ABOUT THE AUTHOR

...view details