சென்னை: ஆவின் பால் நிறுவனத்தில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
மேலும், இது குறித்து அவர்கள் கூறுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட், பொது மேலாளர், மேலாளர் என ஒவ்வொரு பணியிடத்திற்கும் 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து, அப்பணியிடங்களை தகுதியற்றோருக்கு பணத்திற்காக விற்பனை செய்தனர்.
ஆவின் நிறுவனத்தில் முறைகேடு
இதனால் படித்த, திறமையான இளைஞர்களின் அரசுப் பணி என்னும் கனவில் மண் அள்ளிப் போட்ட அந்தக் கும்பல் மீது ஆவின் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் கந்தசாமி, விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதைத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதாரப் பாராட்டுகிறது; வரவேற்கிறது.
அதே நேரம் ஜனவரி 1 முதல் ஜூன் 15ஆம் தேதி வரை மட்டும் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன என்னும் கோணத்தில் விசாரணை நடத்தாமல் கடந்த 10 ஆண்டுகளில் ஆவின் நிறுவனத்தில் நடைபெற்ற அனைத்து பணி நியமனங்கள் குறித்தும் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
அத்துடன் தமிழ்நாடு முழுவதும் உள்ள பால் மொத்த குளிர்விப்பான நிலையங்கள் (BMC), பால் குளிரூட்டும் நிலையங்களில் (MCC) நடைபெறும் பல லட்சம் ரூபாய் பால் கொள்முதல் மோசடிகள், பால் விநியோகம், விற்பனையில் ஆவினின் கூட்டுறவு சங்க விதிகளை மீறிச் செயல்பட்டு தங்களின் சுய லாபத்திற்காக C/F ஏஜென்ட் நியமனம் செய்து அதன்மூலம் செய்த பல கோடி ரூபாய் முறைகேடுகள், ஆரூத்ரா உள்ளிட்ட பல்வேறு தனியார் பால் நிறுவனங்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் குறைந்த விலைக்கு பால், பால் பவுடர் வழங்கி அதனால் ஏற்பட்ட பல கோடி ரூபாய் இழப்புகள் ஆகியவற்றையும் ஆராய்ந்து அதற்கு உறுதுணையாக இருந்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தினர்.