சென்னை:முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு கட்சியினுடைய வலிமை அதனுடைய சுயபலத்தில் இல்லை. அந்தக் கட்சியை எதிர்க்கின்ற எதிர்கட்சிகளின் வலுவின்மையில்தான் இருக்கிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு இதைத்தான் உணர்த்தியுள்ளது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழுக்கு பங்கம் ஏற்படும் வகையில், அண்மையில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவு அமைந்துள்ளது.
இந்தத் தோல்வி ஒவ்வொரு தொண்டனையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. பல காரணங்களால் பொதுமக்கள் திமுக அரசின் மீது மிகுந்த அதிருப்திக்கு ஆளாகியிருக்கின்ற நிலையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு வெற்றி வாய்ப்பினை பெறாமல், வரலாறு காணாத படுதோல்வி அடைந்திருப்பதற்கு காரணம் உழைத்தவர்களை உதறித் தள்ளியது, பணத்தால் தன்னை முன்னிறுத்திக் கொள்ள முனைந்தது போன்ற நம்பிக்கைத் துரோகங்கள் தான். இவற்றைப் பார்க்கும்போது, "பொதுப் பணி என்ற பெயரால் தான் பெற்ற செல்வாக்கை, பணப் பெட்டியை நிரப்பும் வழியாக உபயோகிப்பவன், மக்களால் வெறுக்கப்படுவான்" என்ற அண்ணாவின் பொன்மொழிதான் நினைவிற்கு வருகிறது.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் கிட்டத்தட்ட 9,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தற்போது 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது பிரதான எதிர்க்கட்சியான அதிமுக வலுவிழந்த நிலையில் இருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. அதிமுக இடைத்தேர்தல் வரலாற்றில் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருப்பது இதுவே முதல் முறை. இதற்குக் காரணம், துரோகியும், துரோகியின் தலைமையிலான ஓர் சர்வாதிகாரக் கூட்டமும் தான்.