சென்னை: தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா காரணமாக நாளை (ஜன.16) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்த பட உள்ளது.
இந்நிலையில், தொடர் விடுமுறையால் காசிமேடு மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் குவிந்துள்ளனர். இன்று மாட்டு பொங்கல் என்பதாலும், நாளை ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதாலும் மீன் வாங்குவதற்காக காசிமேடு மீன்மார்க்கெட்டில் ஏராளமான பொதுமக்கள் குவிந்துள்ளனர்.
விற்பனைக்காகச் சின்ன நண்டு, இறால் வகைகள், சூரை, வஞ்சிரம், சுறா, களவாண், கோலா, சங்கரா, கடம்பா உள்ளிட்ட மீன்கள் அதிகளவில் வந்திருந்தன. இதில் நண்டு கூடை ரூ.500 முதல் ரூ.700க்கும், இறால் கிலோ ரூ.300க்கும், டைகர் இறால் கிலோ ரூ.800க்கும், சூரை சிறிய வகை மீன்கள் கிலோ ரூ.140க்கும், பெரிய வகை சூறை மீன்கள் கிலோ ரூ.270க்கும் என்ற விலையில் விற்பனை நடைபெற்றது.
மேலும், வஞ்சிரம் கிலோ ரூ.500 முதல் ரூ.600க்கும், சுறா சிறிய வகை மீன்கள் கிலோ ரூ.230க்கும், பெரிய வகை சுறா கிலோ ரூ.450க்கும், களவாண் வகை மீன் சிறிய வகை கிலோ ரூ.270க்கும், பெரிய வகை களவாண் மீன் ரூ.500க்கும், கோலா மீன் கிலோ ரூ.300க்கும், சங்கரா மீன் கிலோ ரூ.350க்கும், கடம்பா மீன் கிலோ ரூ.350க்கும், விரால் மீன் சிறிய வகை கிலோ ரூ.340க்கும், பெரிய வகை விரால் மீன் ரூ.650க்கும் விற்பனை ஆனது.