சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களைக் கடந்த 2023 டிசம்பர் 4ஆம் தேதி அன்று மிக்ஜாம் புயல் (MICHAUNG) உருவாகி கடந்த டிச.5 ஆம் தேதி மாலை ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடந்தது. இந்நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவும், வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்தவர்களை மீட்டெடுக்கவும் உதவியர்கள் தான் மீனவ மக்கள். ஆனால், தற்போது மீனவர்களாகிய தங்களுக்கு உதவ தான் யாரும் முன் வரவில்லை என மீனவர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர்.
வட சென்னை எண்ணூர் பகுதிக்குட்பட்ட எண்ணூர் குப்பம், தாளம் குப்பம் ஆகிய பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் என்பதே மீன்பிடித் தொழில் மட்டுமே. அதிலும், இந்த எண்ணூர் பகுதி என்பது கொசஸ்தலை (கொற்றலை) ஆறும் கடற்கரையும் இணையும் முகத்துவாரம் என்பதால், மீன்களுடைய வரத்து மற்றும் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும். இப்படி இந்த கடல் வளங்களை மட்டுமே நம்பி தங்களின் வாழ்க்கையை நகர்த்திச் செல்லும் மீனவர்களின் வாழ்வாதாரம் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக கேள்விக்குறியாகி நிற்பது தான் வேதனை அளிக்கிறது.
எண்ணெய் கசிவு: எண்ணூர் பகுதி என்பது பெட்ரோலிய எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த பகுதி, இதில் கொசஸ்தலை ஆற்றிற்கு அருகில் இருக்கும் எண்ணெய் நிறுவனத்திலிருந்து அவ்வப்போது எண்ணெய் கழிவுகள் திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும், இதனால் பல உடல் உபாதைகள் தங்களுக்கு ஏற்படுவதாகவும் எண்ணூர் குப்பம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, ஆலையிலிருந்து வெளிவரும் எண்ணெய் கழிவு மட்டுமல்லாது சாம்பல் மற்றும் சூடான நீர் அதிகளவு ஆற்றில் கலப்பதால் மீன்கள் மட்டுமல்லாது பல கடல் உயிரினங்கள் அவ்வப்போது இறந்து கரை ஒதுங்குவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், எண்ணூர் பகுதியில் செயல்பட்டு வரும் சிபிசிஎல் நிறுவனத்திலிருந்து வெளியேறிய எண்ணெய் கழிவுகளை தற்போது வரை அகற்றாமல் சிபிசிஎல் நிறுவனமும், அதிகாரிகளும் அலட்சியம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு:கொசஸ்தலை ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளை அகற்றுவது மட்டுமல்லாமல் இனி வரும் காலங்களில் இது போன்ற ஒரு நிகழ்வு நடக்காமல் இருக்க நடவடிக்கைகளை சிபிசிஎல் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் அறிவித்திருந்தது.
அதே வேளையில், ஆற்றில் கலந்த எண்ணெய் கழிவுகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்தும் கூட கடந்த 15 நாட்களுக்கு மேலாகியும் 50% பணிகள் கூட முடிவடையவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, அரசு அதிகாரிகள் முதல் பல அரசியல் கட்சித் தலைவர்கள் வரை பார்வையிட்டு செல்வதாகவும், அவர்கள் வரும் போது மட்டும் தான் எண்ணெய் கழிவுகளை அகற்றப் பணியாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்கள் சென்ற பிறகு, இந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற அதிகாரிகளால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் யாரும் அவர்களுடைய பணிகளை செய்வதில்லை என வருத்தம் தெரிவிக்கின்றனர்.
மீனவர்கள் குற்றச்சாட்டு: மீனவர்களாகிய நாங்கள் தான் எங்களுடைய சொந்த ஃபைபர் படகுகளை பயன்படுத்தியும், தங்களால் முடிந்த உபகரணங்களை வைத்து தான் எண்ணெய் கழிவுகளை அகற்றுவதாகவும் தெரிவிக்கின்றார் எண்ணூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர் வெங்கடேஷ்.
மேலும், எங்களுக்கென எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் கொடுக்கபடவில்லை. அப்படியே அதிகாரிகளிடம் கேட்டால் நாங்கள் சொல்வதைக் கூட அவர்கள் காது கொடுத்து கேட்பதில்லை என கூறுகிறார். குறிப்பாக கடற்கரை ஓரமாக கடற்கரை மணலில் படர்ந்திருந்த எண்ணெய் கழிவுகளை அகற்ற ஜேசிபி இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் கடலின் முகத்துவாரத்தில் கலந்த எண்ணெய் கழிவை அகற்ற அப்படி எந்தவித இயந்திரமோ பயன்படுத்தபடவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும், கடற்கரை மணலில் 4 அடி ஆழம் வரை மணல் எடுக்கப்பட்ட பிறகும் கூட எண்ணெய் கழிவின் சுவடு இருக்கிறது. அப்படியென்றால், ஆற்று நீரின் நிலையை நினைத்து பாருங்கள் இங்கு இனப்பெருக்கத்திற்காக வரும் கடல் வாழ் உயிரினங்களின் நிலையை சற்று சிந்தித்து பாருங்கள். இதை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தும் எங்களின் நிலையை நினைத்து பாருங்கள் என கண்ணீர் மல்க கூறுகிறார்.