சென்னை:தண்டையார்பேட்டை கும்மாளம்மன் கோயில் தெருவில் காய்கறி வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு விதிமுறைகளுடன் ஊரடங்கு உத்தரவை அரசு அமல்படுத்தியுள்ள நிலையில், பொது மக்கள் அவற்றைக் கடைபிடித்து வருகிறனர்.
அதன் ஒரு பகுதியாக தண்டையார்பேட்டை மார்க்கெட்டில் மக்கள் அதிகம் கூடுவதால் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகளுக்கு அருகிலுள்ள அரசு பள்ளிக் கட்டடத்தில் வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டது. நான்கு நாள்களாக அங்கு அவர்கள் வியாபாரம் செய்து வந்த நிலையில், நேற்று (மே.21) திடீரென மாநகராட்சி அலுவலர்கள் வியாபாரம் செய்வதற்கு தடை விதித்து அதிகாலை முதலே பள்ளிக்கூடத்தின் வாசலை பூட்டு போட்டு பூட்டி வைத்தனர்.
இதனால் காலையில் வியாபாரம் செய்வதற்கு வந்த காய்கறி வியாபாரிகள் பள்ளிக்கூட வாசல் பூட்டு போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் காய்கறிகள் உள்ளே இருக்கும் நிலையில் காய்கறிகள் அழுகிவிடும் என்பதனாலும், வியாபாரம் செய்ய முடியாததாலும் வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.