சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சிறப்பு நீதிமன்ற அதிகாரம் கொண்டு இயங்கும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், விசாரித்து உத்தரவு பிறப்பக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்பதில் அமலாக்கத் துறை வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அல்லது எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகள் விசாரணை நடத்தும் சிறப்பு நீதிமன்றம் ஆகியவற்றிற்கு இடையே தெளிவில்லாத சூழல் நிலவுகிறது.
எனவே, ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா? என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறு செந்தில்பாலாஜிக்கு எம்.பி. எம்.எல்.ஏக்களுக்கு எதிரான மனுக்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி அறிவுறுத்தி இருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக தீர்வு காண தாக்கல் செய்யப்பட்ட செந்தில் பாலாஜி மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார். அப்போது, செந்தில்பாலாஜி ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டை எப்படி ஏற்பது? என நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ மாற்று அமர்வான நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் வழக்குகளை விசாரிக்கவில்லை என்பதால், இந்த அமர்வில் முறையிடுவதாகவும், நிர்வாக ரீதியான உத்தரவை பிறப்பித்தால் கூட போதுமானது எனவும் தெரிவித்தார்.
ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்கிற இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் எந்த அமர்வு நீதிமன்றம் விசாரிப்பது? என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் எனக் கூறிய நீதிபதி எம்.சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடும்படி அறிவுறுத்தினார்.
நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க மறுத்த நிலையில், வழக்கிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகுவதாக நீதிபதி சக்திவேல் செப்டம்பர் 02ஆம் தேதி அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிப்பது என்பது குறித்து முடிவு செய்ய நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அடங்கிய அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.
இதையும் படிங்க:Speaking For India : முதலமைச்சர் ஸ்டாலினின் "ஸ்பீக்கிங் பார் இந்தியா" ! இந்திய மொழிகளில் ஆடியோ வெளியீடு!
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "கடந்த 78 நாட்களாக செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் சிறையில் உள்ளார். சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மீதான விசாரணை முடிந்து விட்டது. மறு விசாரணை தேவையல்லை என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் இந்த வழக்கில் ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என செந்தில் பாலாஜி மற்றும் அமலாக்கத்துறை தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை.
மத்திய வருவாய் மற்றும் நிதித்திறை அறிக்கையில் பிரிவு 43ன் படி சிறப்பு நீதிமன்றங்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான வழக்குகளை விசாரிக்க மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் 2019ஆம் ஆண்டு முதல் தற்போது 3 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. சிறப்பு நீதிமன்றங்களில் 1 மற்றும் 2 நீதிமன்றங்கள் மாவட்ட நீதிமன்றத்துக்கான அதிகாரமும், 3வது நீதிமன்றம் நடுவர் நீதிமன்றத்துக்கான அதிகாரத்துடனும் செயல்படுகிறது.
அரியலூர், திருச்சி, மதுரை மற்றும் சென்னையில் இயங்கும் மாவட்ட நீதிமன்றங்கள் சிறப்பு நீதிமன்றங்களாக செயல்படுகின்றன. சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டம் 4ன் படி தண்டனைக்கு உரிய குற்றத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்திருப்பதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
அதன்படி, பிரிவு 43(1)ன் படி சிறப்பு அதிகாரம் கொண்ட மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிக்க முழு அதிகாரம் உள்ளது. எனவே, சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ஜாமீன் மனுவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்து உள்ளனர்.
இதையும் படிங்க:மாஜி பெண் டிஜிபியின் மருமகளுக்கு எதிரான போக்சோ வழக்கில் நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நிதிமன்றம்!