தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கடந்த தேர்தல்களில் முடிவுகளை எழுதிய சம்பவங்கள் - tamilnadu assembly election

தேர்தல் சமயத்திலோ இல்லை அதற்கு முன்னதாகவோ நடந்த சம்பவங்கள் அப்போது நடந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போதைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை என கரும்புள்ளிகள் விழுந்திருக்கின்றன.

அச்ஃப்
ட்ஃபச்

By

Published : Mar 4, 2021, 9:37 AM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. இதே அரசு நீடிக்குமா இல்லை புதிய அரசு அமையுமா என்பதற்கான பதில் மே 2ஆம் தேதி தெரிந்துவிடும். பொதுவாகவே சூடுபிடிக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் போல் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு ஆளுமைகள் இல்லாமல் நடக்கவிருப்பதால் இந்தத் தேர்தலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ஏராளமான சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடந்துள்ளன. அந்தச் சம்பவங்கள் தேர்தலில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளன. வெறும் புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு ஒரு கட்சி வென்ற வரலாறு, பாரம்பரிய கட்சி வெறும் இரண்டு எம்.எல்.ஏக்களுடன் சட்டப்பேரவைக்குள் நுழைந்தது என தேர்தலுக்கு முன் நடந்த சம்பவங்கள் காட்சிகளின் முடிவுகளை எழுதியிருக்கின்றன.

எம்.ஆர். ராதாவால் வென்ற எம்ஜிஆர்:

நடிகவேள் எம்.ஆர். ராதா ஒருமுறை எம்ஜிஆரை பார்ப்பதற்காக ராமாவரம் தோட்டத்துக்கு சென்றார். அவரை எம்ஜிஆரும் வரவேற்றார். ஆனால், அவர்களுக்குள் இருந்த மனக்கசப்பு அன்று மோதலாக வெடித்தது. அந்த மோதல் துப்பாக்கிச் சூடுவரை சென்றது. எம்ஜிஆரை நோக்கி சுட்ட எம்.ஆர். ராதா தன்னை நோக்கி தானே சுட்டுக்கொண்டார். இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டனர்.

1967ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. தேர்தல் பரப்புரை தொடங்கியதும், கழுத்தில் கட்டுடன் எம்ஜிஆரின் புகைப்படத்தை பயன்படுத்தி திமுக வாக்கு சேகரித்தது. பரங்கிமலைத் தொகுதியில் போட்டியிட்ட எம்ஜிஆர் தன்னுடைய செல்வாக்கினாலும், எம்.ஆர். ராதா சுட்டத்தால் கிடைத்த அனுதாபத்தாலும் அபார வெற்றி பெற்றார். அந்தத் தேர்தலில் வென்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சி அமைத்தது.

ராஜிவால் ”கோட்டை” விட்ட திமுக

எம்ஜிஆர் மரணத்துக்கு பின் ஏறத்தாழ 14 வருடங்கள் கழித்து 1989ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று கருணாநிதி முதலமைச்சரானார். ஆனால், ராஜீவ் காந்தி மரணம் திமுகவின் ஆட்சியை கலைத்தது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் திமுகவுக்கும் தொடர்பிருப்பதாக தகவல் பரவியது.

இதனையடுத்து நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் கருணாநிதியும், பரிதி இளம்வழுதி மட்டுமே வெற்றி பெற்றனர். இதுவரை திமுக சார்பாக குறைந்தபட்ச எம்.எல்.ஏக்களை கோட்டைக்குள் நுழைய வைத்தது அந்தத் தேர்தலில்தான்.

திமுக கோட்டைக்கு செல்ல ரஜினி காரணம்?

1991ஆம் ஆண்டு தேர்தலில் அடைந்த தோல்வியை சரிக்கட்ட திமுக அடுத்த தேர்தலில் தீவிரமாக களமாடியது. காங்கிரஸிலிருந்து விலகி தமிழ் மாநில காங்கிரஸை ஆரம்பித்த மூப்பனாருடன் கைகோர்த்தார் கருணாநிதி.

அதேபோல், நடிகர் ரஜினிக்கும், ஜெயலலிதாவுக்கும் உரசல் ஏற்பட, அதுவரை பூடகமாக அரசியல் கருத்துக்கள் பேசிய ரஜினி, திமுக - தமாகா கூட்டணிக்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்தார்.

ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால்கூட காப்பாற்ற முடியாது என்று குரல் எழுப்பினார். இதனால்தான் திமுக வென்றதாக இன்றளவும் ரஜினி ரசிகர்கள் கூறிக்கொண்டிருக்கின்றனர்.

அதேசமயம், அந்தத் தேர்தலில் வென்றதற்கு ரஜினியின் வாய்ஸைவிட ஜெயலலிதா மீதிருந்த அதிருப்தியும், கருணாநிதியின் கூட்டணி வியூகமும்தான் காரணம் என்று திமுகவினர் கருதுகின்றனர்.

ஈழ படுகொலையால் தோல்வியடைந்த திமுக:

ஈழ விவகாரத்தில் ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியை இழந்த திமுக, 2009ஆம் ஆண்டு ஈழ படுகொலை நடந்தபோது மேற்கொண்டு கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலை காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து திமுக சந்தித்தது.

ஆனால், ஈழ படுகொலைக்கு காங்கிரஸ் துணை போனதாக ஒரு எண்ணம் இருந்த சூழலில் இந்தக் கூட்டணி தமிழ்நாட்டில் செல்லுபடியாகவில்லை. அதுமட்டுமின்றி, தேமுதிக அதிமுகவுடன் சென்றது, திமுக - காங்கிரஸ் மீது 2ஜி ஊழல் குற்றச்சாட்டு என தொடர்ந்து சறுக்கல்களையே சந்தித்த திமுக அந்தத் தேர்தலில் தோல்வியடைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது.

இப்படி தேர்தல் சமயத்திலோ இல்லை அதற்கு முன்னதாகவோ நடந்த சம்பவங்கள் அப்போது நடந்த தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. தற்போதைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை என கரும்புள்ளிகள் விழுந்திருக்கின்றன.

அதேசமயம், தேர்தல் சமயத்தில் நிகழும் மோசமான சம்பவங்கள் முடிவுகளை நிர்ணயிக்கும் வரலாறு உண்டென்பதால் ஒவ்வொரு அடியையும் எடப்பாடி பழனிசாமி பார்த்து பார்த்து எடுத்து வைக்கிறார்.

ஆனாலும், ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிமுகவுக்கு என்ன முடிவு எழுதியிருக்கின்றதென்பது இன்னும் இரண்டு மாதங்களில் தெரிந்துவிடும்.

ABOUT THE AUTHOR

...view details