சென்னை: இன்று (அக்.20) அதிகாலை 5:05 மணியளவில் சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம், காலை 8:05 மணியளவில் அந்தமானில் இருந்து புறப்பட்டு, காலை 10:20 மணியளவில் சென்னைக்கு திரும்பி வரவிருந்தது. ஆனால் அந்தமானில் இருந்து சென்னை திரும்புவதற்காக தயாரகிக்கொண்டிருந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது.
இதை அடுத்து அந்தமான் விமான நிலையத்திலேயே ஏர் இந்தியா பயணிகள் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அந்தமானிலிருந்து சென்னைக்கு வர இருந்த 148 பயணிகளும், அந்தமான் விமான நிலையத்தில் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதற்கிடையே இந்த ஏர் இந்தியா விமானம், காலை 10:20 மணியளவில் அந்தமானிலிருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, பின் மீண்டும் பகல் 12 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இலங்கையின் தலைநகர் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்ல இருந்தது.
அந்த விமானத்தில் கொழும்பு செல்வதற்காக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், 156 பயணிகள், இன்று(அக்.20) காலை 9 மணியளவில் விமான நிலையத்தில் அனைத்து சோதனைகளையும் முடித்துவிட்டு, இலங்கை செல்வதற்காக காத்திருந்தனர். ஆனால் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம் சென்னை வராததால், சென்னையில் இருந்து இலங்கை செல்லும் விமானம் 6 மணி நேரம் தாமதத்திற்குப் பின்னர், மாலை 6 மணியளவில் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.