தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 11, 2023, 7:44 AM IST

ETV Bharat / state

சென்னையில் மோசமான வானிலையால் 10 விமானங்கள் தாமதம் - சீரடி செல்லும் விமானம் முழுவதும் ரத்து!

சென்னையில் இருந்து சீரடி செல்ல வேண்டிய தனியார் பயணிகள் விமானம் மோசமான வானிலை காரணமாக திடீர் ரத்து செய்யப்பட்டதுடன், எதிர் முனையில் வரும் விமானங்கள் தாமதம் காரணமாக 10 விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகி பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

சென்னையில் மோசமான வானிலையால் விமானம் திடீர் ரத்து மற்றும் 10 விமானங்கள் தாமதமாகி பயணிகள் அவதி
சென்னையில் மோசமான வானிலையால் விமானம் திடீர் ரத்து மற்றும் 10 விமானங்கள் தாமதமாகி பயணிகள் அவதி

சென்னை: சென்னையில் இருந்து நேற்று (ஆகஸ்ட் 10) மாலை 3.45 மணிக்கு சீரடி செல்லும் தனியார் பயணிகள் விமானத்தில் 127 பயணிகள் பயணிக்க இருந்தனர். இந்த நிலையில், இந்த விமானம் குறிப்பிட்ட நேரத்திற்கு புறப்படாமல் தாமதமாக மாலை 4.30 மணிக்கு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து பயணிகள் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

இந்த நிலையில், மாலை 4.30 மணிக்கு, அந்த விமானம் ரத்து செய்யப்படுவதாகவும், மோசமான வானிலை நிலவுவதால் விமானம் சீரடி செல்லாது என்றும் பயணிகளுக்கு அறிவிப்பு செய்யப்பட்டது. இதை அடுத்து அதிர்ச்சி அடைந்த பயணிகள், தனியார் விமான நிறுவன அதிகாரிகளுடன் விமானம் ரத்து செய்யப்பட்டது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அதிகாரிகள், மோசமான வானிலை நிலவுவதால் பயணிகளின் பாதுகாப்பு கருதிதான் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், இதே டிக்கெட்டில் நாளை விமானத்தில் பயணிகள் பயணிக்கலாம் எனவும், இல்லையேல் துர்காப்பூர் செல்லும் விமானத்தில் சென்று, அங்கிருந்து சாலை வழியாக சீரடி செல்லலாம் என்றும் கூறி பயணிகளை சமாதானம் செய்தனர். இருப்பினும் பயணிகள் விமான ரத்து குறித்து முன்னரே அறிவிக்கா நிலையில் பெரும் அவதி அடைந்தனர்.

இதனிடையே நேற்று சென்னை விமான நிலையத்தில் அந்தமான், பெங்களூரு செல்ல வேண்டிய விமானங்கள் சுமார் 4 மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. அதேபோல் மதுரை, மும்பை விமானங்களும் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தாமதம் ஆகின.

இதையும் படிங்க:பக்தர்கள் ஆசைப்பட்டு வரும் ஆன்மீக பூமி, திருவண்ணாமலை - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

சர்வதேச முனையத்தில் சிங்கப்பூர், கோலாலம்பூர், மஸ்கட் செல்ல வேண்டிய விமானங்கள் 2 மணி நேரத்துக்கும் மேலாக தாமதமாக இயக்கப்பட்டன. எதிர்முனையில் வர வேண்டிய விமானங்கள் தாமதம் காரணமாக இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்களும், தாமதமாக புறப்படுகின்றன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இவ்வாறு நேற்று ஒரே நாளில் சென்னை உள்நாடு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் மோசமான வானிலை காரணமாக, ஒரு விமானம் ரத்து செய்யப்பட்டு, எதிர் முனையில் வரவேண்டிய 10 விமானங்கள் பல மணி நேரம் தாமதமாகின.

பயணிகளுக்கு விமானம் தாமதம் மற்றும் ரத்து பற்றி முன்னதாகவே அறிவிப்பு செய்யப்படாததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி, விமான நிறுவன அதிகாரிகளிடமும், விமான நிலைய அதிகாரிகளிடமும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:ஆசிய ஹாக்கி கோப்பை:நாளை அரையிறுதி... 4 அணியில் இறுதிக்குள் நுழையப்போவது யார்?

ABOUT THE AUTHOR

...view details