சென்னை: சென்னையில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்பு செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், 186 பேர் இலங்கை செல்ல இருந்தனர். இந்த விமானம் வழக்கமாக இலங்கையில் இருந்து காலை 8.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, மீண்டும் இங்கிருந்து இலங்கை புறப்பட்டுச் செல்லும். ஆனால் இந்த விமானம், இன்று இலங்கையில் இருந்து சென்னைக்கு வரவில்லை.
அதேபோல், இலங்கையில் மோசமான வானிலை நிலவுவதாக, இலங்கையில் இருந்து சென்னை வர வேண்டிய பயணிகள் விமானமும் வரவில்லை. எனவே, சென்னையில் இருந்து இலங்கை செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று இலங்கை செல்லாது எனக் கூறப்பட்டு, அவ்விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தில் பயணிக்க வந்த 186 பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், அவர்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட பயணிகள், இலங்கை வழியாக சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் ஆவர். ஆகையால், அவர்கள் கடும் வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிர்வாகம், அந்த ட்ரண்ட்ஷிட் பயணிகளுக்கு மட்டும் ஏர் இந்தியா, உள்ளிட்ட வேறு விமானங்களில் டிக்கெட்டுகளை மாற்றி அனுப்பி உள்ளனர்.
ஆனால் நேரடியாக இலங்கை மட்டும் செல்லக்கூடிய 140 பயணிகளுக்கு விமானம் இன்று ரத்து என உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இன்று இரவு அல்லது நாளை காலை செல்லும் விமானத்தில் தாங்கள் பயணிக்கலாம் என்று கூறி, பயணிகளை விமான நிலையத்திற்கு கூட அனுமதிக்காமல் திருப்பி அனுப்ப முயற்சித்துள்ளதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, இலங்கை செல்ல இருந்த 140 பயணிகளும், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர்.