சென்னை: சா்வதேச விமான நிலையத்திலிருந்து சாா்ஜா செல்லும் ’ஏா் அரேபியா ஏா்லைன்ஸ்’ விமானம், இன்று (செப்.16) காலை புறப்படத் தயாரானது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளின் பாஸ்போா்ட் உள்ளிட்ட ஆவணங்களை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் பரிசோதித்து விமானத்துக்கு அனுப்பிக் கொண்டிருந்தனா்.
அந்த விமானத்தில் வேலூரைச் சோ்ந்த சமியுல்லா (28) என்பவா் பயணிக்க வந்தாா். அவருடைய பாஸ்போா்ட்டை அலுவலர்கள் ஆய்வு செய்தனா். அதில் அவா் 2019ஆம் ஆண்டில் சாா்ஜாவுக்கு வேலைக்குச் செல்வதாக விசா வாங்கிவிட்டு, சாா்ஜா வழியாக ஏமன் நாட்டுக்குச் சென்று எட்டு மாதங்கள் தங்கியிருந்தது தெரியவந்தது.
இந்திய அரசால் தடை செய்யப்பட்ட ஏமன், லிபியா
இந்திய அரசால் பாதுகாப்புக் காரணங்களுக்காக தடை செய்யப்பட்ட நாடுகள் ஏமன், லிபியா. 2014ஆம் ஆண்டிலிருந்து இந்திய அரசு இந்தத் தடையை விதித்துள்ளது. தடையை மீறி இந்த நாடுகளுக்குச் செல்பவா்கள் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதையடுத்து பயணி சமீயுல்லாவை குடியுரிமை அலுவலர்கள் நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் அலுவலகப் பணியாக சாா்ஜாவிலிருந்து ஏமன் நாட்டுக்கு சென்றதாகக் கூறினாா். ஆனால் அலுவலர்கள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இவா் தற்போதும் சாா்ஜா, சென்று ஏமன் செல்லவிருப்பதையும் கண்டுப்பிடித்தனா்.
குடியுரிமை அலுவலர்கள் நடவடிக்கை
இதையடுத்து சமியுல்லாவின் பயணத்தை ரத்து செய்தனா். அதோடு அவரை தனி அறையில் வைத்து தீவிர விசாரணை நடத்தினா். அதன்பின்பு அவரைக் கைது செய்த அலுவலர்கள், மேல்நடவடிக்கைக்காக சென்னை விமான நிலைய காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
ஏமன் பயணிக்கவிருந்த வேலூர் பயணி அதனைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய காவலர்கள், சமியுல்லா மீது அரசின் தடையை மீறி ஏமன் நாட்டுக்குச் சென்றது, பாஸ்போா்ட்டை தவறாக உபயோகப்படுத்தியது ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
இதையும் படிங்க:வருமானத்துக்கு மேல் 654% சொத்துக் குவிப்பு... கே.சி.வீரமணி மீது வழக்குப்பதிவு!