சென்னை: அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுடைய கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், கலந்தாய்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் அரசே ஏற்கும் என்ற சிறப்புமிக்க அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அடிப்படையில் பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களில் 50 பேருக்கு சேர்க்கை ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார்.
அப்போது பேசிய முதலமைச்சர், "அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தொழிற்கல்வியில் சேர்வதற்காக 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. பொறியியல் பட்டதாரி ஆக வேண்டும் என்ற உங்களது கனவு நிறைவேறும் நாள் இது! உங்கள் கனவு நிறைவேறுவதன் மூலமாக உங்களது பெற்றோரது கனவும், உங்களது குடும்பத்துக் கனவும் நிறைவேறக்கூடிய நாளாக இது அமைந்திருக்கிறது. போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், நமக்கு இடம் கிடைக்குமா, அதுவும் அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்குமா என்ற ஏக்கம் சில மாதங்களுக்கு முன்பு வரை உங்களுக்கு இருந்திருக்கும்.
அந்த ஏக்கம் மறைந்து, ஏற்றம் பிறக்கும் நாள்தான் இந்த நாள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன். இந்த நாட்டின் நிலையான செல்வம் பொறியியல் பட்டதாரிகளும், மருத்துவ வல்லுநர்களும், கல்வியாளர்களும்தான் என்று அறிஞர் அண்ணா குறிப்பிட்டார். அதனால்தான் அண்ணா அதிகமாக மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
திராவிட இயக்கத்தின் நோக்கம்
கல்விச் செல்வம், கடைசி மனிதனுக்கும் கிடைக்க வேண்டும் என்று அண்ணா நினைத்தார். திராவிட இயக்கத்தின் நோக்கமே அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் கல்விக்கேற்ற வேலை தரப்பட வேண்டும் என்பதுதான். இந்த இயக்கமே அதற்காகத் தான் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டின் இளைய சக்திகள் அனைத்தும் உயர் கல்வியை அடைவதுதான் இந்த அரசின் உயரிய இலக்கு ஆகும்.
அந்த வகையில், இந்த 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் தொழிற்படிப்புகளில் சேரக்கூடிய மாணவர்கள், அவர்களுடைய பெற்றோர் மனம் மகிழக்கூடிய வகையில் ஒரு செய்தியை, ஒரு அறிவிப்பை மகிழ்ச்சியோடு நான் வெளியிடக் காத்திருக்கிறேன்.