சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் ஆவடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மா.பா.பாண்டியராஜன், 1,395 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில், திமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “பணப்பட்டுவாடா உள்ளிட்ட முறைகேடுகளில் பாண்டியராஜன் ஈடுபட்டார். அவரது வெற்றி செல்லாது என அறிவிக்க வேண்டும்" என வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் இரண்டு நாட்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அவரிடம் திமுக முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர் தரப்பில் குறுக்கி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மா.பா.பாண்டியராஜன் தரப்பில், “அதிமுக அட்டை படம் போட்ட தேர்தல் வாக்குறுதி நோட்டீஸ்களில் 500 ரூபாய் நோட்டுகளை வைத்து வாக்காளர்களுக்கு கொடுக்க முயற்சித்த போது, தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இது குறித்து நேரில் ஆஜராகும்படி தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பியதாக கூறப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறு. எனக்கு எந்தவொரு சம்மனும் வரவில்லை" என தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தேதியை குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (ஜூன் 5) தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஆர்.சுப்ரமணியன், “மா.பா.பாண்டியராஜனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை. ஆவடி நாசர் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. முன்னாள் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெற்ற வெற்றி செல்லும்" என அறிவித்தார்.
இதையும் படிங்க: கோயில்களில் திருவிழா குழு அமைக்க தடை விதித்த உத்தரவை மீறிய நீதிமன்ற அவமதிப்பு வழக்கு முடித்து வைப்பு