சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 18ஆவது தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்டு தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்புரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இடமாக கீழடி மாறியுள்ளது. தமிழ்நாடு அரசால் 40 அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. கீழடியில் நடத்தப்பட்டுவரும் 5ஆம் கட்ட அகழாய்வு தொடர்பாக அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
அதில் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. இது தொடர்பாக, இந்த பகுதியில் நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சங்குகளை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல வணிக ரீதியான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றுவரை இந்தியாவின் பல பகுதிகளில் கழிவுநீர் வடிகால்கள் சரிவர அமைக்கப்படவில்லை.
ஆனால் அந்த காலத்திலேயே கழிவிடங்கள், கழிவு நீர் செல்லக்கூடிய பாதைகள் இவை அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. கீழடியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பொக்கிஷங்கள் கிடைத்துவருகின்றன . அதேபோல, தங்க நகை ஆபரணங்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கீழடியில் கிடைத்துள்ளன. இது சிந்து சமவெளியில் கிடைத்த அதே தமிழ் பிராமி எழுத்துக்கள் என கண்டறியப்பட்டுள்ளது.