சென்னை:தமிழ்நாட்டில் 20 ஊராட்சிகளில் கடந்த ஆண்டு தேசியக்கொடியை சாதியப்பாகுப்பாட்டினால் ஏற்ற முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், எடுத்தவாய் நத்தம் ஊராட்சித்தலைவர் சுதா வாசுதேவன், தேசியக்காெடியை ஏற்றுவதற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல்துறை அலுவலருக்கு புகார் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்பட்டது. மேலும் திண்டுக்கல், மயிலாடுதுறை, மதுரை, புதுக்கோட்டை, தேனி, கோயம்புத்தூர், திருவள்ளூர், விருதுநகர், சிவகங்கை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள சில கிராமப்பஞ்சாயத்துகளில் தேசியக்காெடியை ஏற்றுவதற்கு நடப்பாண்டிலும் பிரச்னை வரும் எனத்தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ் ''ஈடிவி பாரத் தமிழ்நாடு'' ஊடகத்திற்கு அளித்த சிறப்புப்பேட்டியில், 'சமூகத்தில் தீண்டாமை இருக்கத்தான் செய்கிறது. பள்ளிகள், கல்லூரிகளில் தீண்டாமை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. எய்ம்ஸ் மருத்துவக்கல்வி நிறுவனத்திலும் தீண்டாமை தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது என நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களின் மனப்பக்குவம் வளரவேண்டும்:பட்டியலினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, அவர்கள் முன்னேற்றம் அடைந்தாலும், அறிவியல் ரீதியாக வளர்ந்தாலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பக்குவம் மக்களுக்கு வளரவில்லை. தற்பொழுதும் தீண்டாத கலாசாரம் இருப்பதைப் பார்க்க முடிகிறது. அறிவியல் ரீதியாக வளர்ந்தாலும், அரசும், அரசியல்வாதிகளும், அதனை வளர்க்கவில்லை. இந்திய அரசியலமைப்புச்சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், சட்டம் வலுவானதாக இருந்தாலும், அதனை செயல்படுத்தும் அரசும் வலுவானதாக இருக்க வேண்டும்.
பட்டியலினத்தோர் வன்கொடுமைச்சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் 5 விழுக்காடு வழக்குகள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுவும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி, வழக்கறிஞர் பா.பு.மோகன் போன்றவர்கள் எடுக்கும் நடவடிக்கையால் கிடைக்கிறது.
பட்டியலினத்தோர்களுக்கு வன்கொடுமை செய்தால், அதற்கான சட்டத்தில் இருந்து தப்பமுடியாது என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும். தேசியக் கொடியை பட்டியல் இனத்தலைவர் ஏற்றும் போது, அதனை பலர் வீடியோ எடுத்தாலும் கொடி ஏற்றுபவரை தள்ளிவிடுகிறார் என்றால், அரசு நடவடிக்கை எடுக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.