சென்னை: பரங்கிமலையில் ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ராணுவப் பணியில் சேரும் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி மையத்தில் இந்திய நாட்டைச் சேர்ந்த இளம் அதிகாரிகள் மட்டுமின்றி நட்பு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேலும், இந்த ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் 126 ஆண்கள் மற்றும் 60 பெண் அதிகாரிகள் என மொத்தம் 186 வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த 121 ஆண் அதிகாரிகள், 36 பெண் அதிகாரிகள் பயிற்சி பெற்றதுடன், நட்பு நாடு என்ற வகையில் பூடான் நாட்டைச் சேர்ந்த 5 ஆண் அதிகாரிகள் மற்றும் 24 பெண் அதிகாரிகளும் பயிற்சி பெற்றனர். அதுமட்டுமின்றி இந்தியாவிலேயே இங்கு மட்டும் தான் பெண் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இப்பயிற்சி மையத்தில் கடந்த 11 மாதங்களாக பயிற்சி பெற்ற இளம் ராணுவ அதிகாரிகளின் பயிற்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி பயிற்சி பெற்ற அதிகாரிகளின் நிறைவு விழா மற்றும் அணிவகுப்பு விழா நடைபெற்றது. இதில் வீரர்கள் மிடுக்குடன் நடைபோட்டு அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த அணி வகுப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்களாதேஷ் ராணுவத்தின் தலைமை அதிகாரி ஷஃப்யூதின் அமீது கலந்து கொண்டார்.
பயிற்சி முடித்த இளம் ராணுவ அதிகாரிகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, அனைவருக்கும் அவருடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார். பயிற்சியின்போது ஒட்டுமொத்தமாக சிறப்பாக விளங்கியதற்காக அஜய் சிங் கில் என்ற அதிகாரிக்கு வீரவாளுடன் தங்கப்பதக்கமும், அஜய்குமார் என்ற அதிகாரிக்கு வெள்ளிப் பதக்கமும், மெஹக் ஷைனி என்ற அதிகாரிக்கு வெண்கலப் பதக்கத்தையும் வழங்கி கவுரவித்தார்.
பங்களாதேஷ் ராணுவத்தின் தலைமை அதிகாரி ஷஃப்யூதின் அமீது பேசியதாவது, ''இந்தியாவின் சிறந்த ராணுவ பயிற்சி மையங்களின் ஒன்றான ஓடிஏ(Officers Training Academy, Chennai) வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பங்களாதேஷ் மற்றும் இந்தியா நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. அது இரு நாடுகளும் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் என்பதால் மட்டுமல்ல. கலாசாரம், புவியியல் ரீதியாகவும் இந்தியா, பங்களாதேஷ் ஒன்றாக உள்ளது.
இந்த நேரத்தில் 1971ஆம் ஆண்டு போரை நினைவுகூர கடமை பட்டுள்ளேன். பங்களாதேஷ் விடுதலைக்கு போராடியவர்கள் மற்றும் ராணுவத்திரையும் நினைவுகூர்கிறேன். எங்கள் நாட்டில் உயிரை விட்டவர்கள். இந்திய ராணுவத்தில் உயிர் விட்ட வீரர்களையும் நினைவுகூர்கிறேன். மேலும் ராணுவத்தினருக்கு ஒவ்வொரு நாளும் சவாலானது. சவால்களில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்ளுங்கள். நாட்டுக்காக உயிரையும் தியாகம் செய்ய தயாராக இருக்க வேண்டும்.